கான்பூர், மே 27: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஷூ பாலிஷ் செய்யும் தொழிலாளியின் மகன் அபிஷேக் குமார் பாரதியா, இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி) நுழைவுத் தேர்தவில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
அபிஷேக் குமாரின் வெற்றியால் அவரது குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. அபிஷேக்கின் சாதனைக்கு உத்தரப்பிரதேச ஊடகங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஊடகங்கள் மூலம் தகவல் அறிந்து அபிஷேக்கின் உறவினர்களும், பொதுமக்களும் அவரது வீட்டுக்கு படையெடுத்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 154-வது ரேங்க் எடுத்து அபிஷேக் வெற்றி வாகை சூடியுள்ளார். அபிஷேக்கின் தந்தை ராஜேந்திர பிரசாத் கான்பூரில் சாலை ஓரத்தில் ஷு பாலிஷ் செய்து வருகிறார். தாயார் வீட்டில் இருந்து கொண்டு அக்கம் பக்கத்தினர் தரும் பழைய துணிகளை தைத்து பணம் ஈட்டி குடும்ப சுமையை பகிர்ந்து வருகிறார். ராஜேந்திர பிரசாத் ஒரு நாளைக்கு சம்பாதிக்கும் 70 ரூபாயைத்தான் இந்த ஏழைக் குடும்பம் நம்பியுள்ளது. மின்சாரம் இல்லாத ஒரு அறையை மட்டுமே உடைய வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் வசித்து வருகின்றனர்.
வீட்டில் வறுமை நிலவினாலும் அபிஷேக் குமார் மனம் தளர்ந்து விடவில்லை. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையில் லாந்தர் விளக்கில் தினசரி 5 முதல் 6 மணி நேரம் வரை படித்து ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
விண்வெளி வீரர் ஆகும் கனவை சுமக்கும் அபிஷேக் குமாருக்கு, கான்பூர் ஐ.ஐ.டியில் விண்வெளி தொடர்பான பொறியியல் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
தனது மகனின் சாதனை குறித்து ராஜேந்திர பிரசாத் கூறியது: ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் அதிகமான பணம் கேட்டதால் எனது மகனை எப்படி சேர்ப்பது என்று நினைத்து கவலைப்பட்டேன். அப்போது ஒரு பயிற்சி மைய ஆசிரியர்தான் எனது மகனுக்கு உதவினார். அவர் செய்த உதவியின் மூலம் எனது மகன் கஷ்டப்பட்டுபடித்து ஐ.ஐ.டி.நுழைவுத் தேர்வில் சாதித்துள்ளான். இது எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்றார்.
Leave a Reply