ஒரு லட்சம் கோவில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_35835993290சென்னை: ‘திருத்திய ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரையின்படி, ஒரு லட்சம் கோவில் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்’ என, அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சட்டசபையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்:

* கோவில்களில் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு குறைவாக பெறும் பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு, ‘கலைஞர் காப்பீட்டு திட்டம்’ இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். இதற்கான சந்தா தொகையினை, அறநிலையத்துறை ஏற்கும். மற்ற கோவில் பணியாளர்களுக்கு, இதர காப்பீட்டு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும். இதன் மூலம் ஒரு லட்சம் பேர் பயனடைவர்.

* திருத்திய ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் கோவில் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

*முக்கிய கோவில்களில் உள்ள மூலிகை ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் அமைந்துள்ள தேவாசிரிய மண்டபத்தில் உள்ள மூலிகை ஓவியங்கள் உட்பட 50 முக்கிய கோவில்களில் மூலிகை ஓவியங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும்.

*பன்னிரு ஆழ்வார்களுக்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு நாளில், அரசு விழா நடத்தப்படும்.

*குளித்தலை சிவாயம் அய்யர் மலை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ‘ரோப் கார்’ வசதி செய்யப்படும்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி 66 லட்ச ரூபாயில் மேற்கொள்ளப்படும்.

*பழனி கருணை இல்ல வளாகத்தில், ஒருங்கிணைந்த அர்ச்சகர் பயிற்சி பள்ளி, ஓதுவார் பயிற்சி பள்ளி ஒரு கோடி ரூபாயில் கட்டப்படும்.

*திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் நாழிக்கிணறு தென் பகுதியில், நவீன வசதிகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் மண்டபம் கட்டும் பணி 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

*சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்களின் வசதிக்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூறு கழிப்பறைகள் கட்டப்படும்.

* திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் மேற்கு வாயிலில் 65 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படும்.

*மயிலை கபாலீஸ்வரர் கோவில் தங்கரதம் நிறுத்துமிடம், வாகனங்கள் நிறுத்துமிடப் புனரமைப்பு பணிகள் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

*திருவொற்றியூர் பட்டினத்தார் திருக்கோவில் 50 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.

* மதுரை, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோவில்களில் ஒலி, ஒளி காட்சி அமைக்கப்படும்.

பூ வாசம் வீசிய சபை: தி.மு.க., அரசு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததையடுத்து, சட்டசபை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சபை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து முதல்வர் அறைக்கு சென்று, தி.மு.க., ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்கத்தையொட்டி, முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்களும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க., – ம.தி.மு.க., தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் சபையில் வாழ்த்துரை வழங்கினர்.

அம்மா என்றால் அன்பு: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதிலுரைக்கு பிறகு பேசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சேகர்பாபு, ”சத்துணவுத் துறையின் முக்கியமான ஒன்பது நாட்களில் அன்னையர் தினம் விடுபட்டுள்ளது. ‘தாயில்லாமல் நானில்லை’ என எம்.ஜி.ஆரும், ‘அம்மா என்றால் அன்பு’ என ஜெயலலிதாவும் பாடியுள்ளனர். எனவே, முக்கிய தினங்களின் பட்டியலில் அன்னையர் தினத்தைச் சேர்க்க வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *