ஓமனில் இருந்து 21 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப ஏற்பாடு தீவிரம்

posted in: உலகம் | 0

துபாய் : ஓமன் நாட்டில் விசா காலம் முடிந்து தங்கியிருப்பவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. ஓமன் நாட்டில் வேலை செய்வதற்காக இந்தியர்கள் பலர் கள்ளத்தனமாக அந்நாட்டில் குடியேறியுள்ளனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமலும், விசா காலம் முடிந்தும் தங்கியுள்ள இந்தியர்களை, அபராதம் ஏதும் விதிக்காமல் வெளியேற்ற, அந்நாட்டில் உள்ள இந்திய சமூக நல அமைப்பு, இந்திய தூதரகத்துடன் இணைந்து உதவ முன்வந்துள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பின் செயலர் பி.எம்.ஜபீர் கூறியதாவது: உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் தங்கியுள்ள இந்தியர்களை தண்டிக்காமல் அவர்களை தாயகம் திருப்பி அனுப்பும் படி ஓமன்நாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளோம். அதன்படி, ஓமனில் உரிய விசா இல்லாமலும், காலம் கடந்தும் தங்கியுள்ளவர்கள் உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளும் படி கேட்டுள்ளோம். வரும் 31ம் தேதிக்குள் இவர்கள் தங்கள் கைரேகைகளை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கைரேகை பதிவு செய்யப்பட்டவர்கள் தண்டனையில்லாமல் ஓமனை விட்டு வெளியேற வழிசெய்யப்படும்.

இதுவரை 21 ஆயிரம் பேர் தங்கள் பெயரை தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 11 ஆயிரத்து 500 பேர் கைரேகையை பதிவு செய்துள்ளனர். இதில், எட்டாயிரம் பேர் ஏற்கனவே ஓமனை விட்டு வெளியேறி விட்டனர். மீதமுள்ள மூன்றாயிரத்து 500 பேரின் கைரேகை பதிவு செய்யப்பட்ட பின் அவர்களுக்கு அவசரகால சான்றிதழ் கொடுக்கப்பட்டு தாயகம் செல்ல உரிய நடைமுறைகள் செய்யப்படும். இவ்வாறு ஜபீர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *