மும்பை, மே 2: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் கைதான அஜ்மல் கசாப் மீதான வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாகிறது.
இத்தகைய பரபரப்பான சூழலில் வழக்கு விசாரணை நடைபெறும் ஆர்தர் ரோடு சிறையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறைக்கு அருகே உள்ள சாலையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலையையொட்டியுள்ள சாலை ஒன்று, ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை போலீஸôர் குறித்துக் கொள்கின்றனர்.
மும்பையில் 17 மாதங்களுக்கு முன் பாகிஸ்தானிலிருந்து 10 தீவிரவாதிகள் கடல்மார்க்கமாக படகில் வந்து நவம்பர் 26ம் தேதி விக்டோரியா ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 25 வெளிநாட்டவர் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 304-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தூண்டுதலின்பேரில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தின்போது 9 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் பரித்கோட் பகுதியைச் சேர்ந்தவர் இவர். 166 பேரை கொன்றதாக கசாப் மற்றும் கொலையுண்ட 9 தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உதவியாக, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்திடம் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டிய இடங்கள், மற்றும் வரைபடங்களை கொடுத்து உதவியதாக இந்தியாவைச் சேர்ந்த பாகிம் அன்சாரி, சபாவுதீன் அகமது ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் என தீர்ப்பில் அறிவிக்கப்பட்டால் இவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.
மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கராச்சியில் பயிற்சி பெற்று வந்தவர்கள். இவர்கள் நடத்திய தாக்குதல் 60 மணி நேரம் நீடித்தது. பயங்கரவாத தாக்குதல் ஒன்றில் இவ்வளவு விரைவாக விசாரணை நடந்து முடிந்திருப்பது இதுவாகத்தான் இருக்கும். மே 8ம் தேதி ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. 271 வேலை நாள்கள் விசாரணை நடத்தி 658 சாட்சிகளிடம் சாட்சி சேகரிக்கப்பட்டது. இந்த சாட்சிய விவரம் 3192 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது.
சிறப்பு நீதிபதி எம். எல்.தாஹிலியானி விசாரணை நடத்தினார். துப்பாக்கித் தாக்குதல் நடத்தியவர் கசாப் தான் என விசாரணையில் ஆஜரான 30 சாட்சிகள் அடையாளம் காட்டினர்.
வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உஜ்வல் நிகம் ஆஜராகி ஆவணங்கள், ஆதாரங்களை சமர்ப்பித்தார். மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகளை லஷ்கர்-இ-தொய்பா பயன்படுத்தியது என்றும் குற்றம்சாட்டினார்.
இந்திய சட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வழக்கில் அமெரிக்காவிலிருந்து எப்பிஐ அதிகாரிகள் வந்து சாட்சியம் அளித்தனர்.
கசாப் துப்பாக்கித் தாக்குதல் நடத்துவதை படம் எடுத்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் தாக்கல் செய்த புகைப்படங்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இந்த படங்கள் அனைத்தும் தில்லு முல்லு செய்யப்பட்டவை என கசாப் மறுத்துள்ளார்.
குண்டு துளைக்காத அறையில் கசாப் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கின் தொடக்கத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கசாப் பின்னர் மாற்றிக்கொண்டார்.
அவருக்கு எதிராக 11 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கசாப் தரப்பில் மொத்தம் 3 வழக்கறிஞர்கள் ஆஜராகினர். முதலில் அஞ்சலி வாக்மரே, அடுத்ததாக அப்பாஸ் காஸ்மி ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களுக்கு பிறகு கடைசிவரை கசாபுக்காக வாதாடியவர் கே.பி.பவார்.
கசாபுக்கு வயிற்றுவலி: தீவிரவாதி கசாபுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியான பிறகு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடத்தப்படலாம் என தெரிகிறது.
Leave a Reply