தூத்துக்குடி:தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு 32 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க விரைவு கோர்ட் உத்தரவிட்டது.தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்தவர் அன்டோவிக்டோரியா.
இவர் சிறிய கப்பல்கள் மூலம் தூத்துக்குடியிலிருந்து இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறார்.
99 ம் ஆண்டு செப்., 11ல் அன்டோ விக்டோரியாவுக்கு சொந்தமான ‘மரியஆன்டோராஜ்’ என்ற கப்பலில் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்றனர். மாலுமி உட்பட 12 தொழிலாளர்கள் இருந்தனர்.கப்பல் தூத்துக்குடியிலிருந்து 20 கடல் மைல் தூரம் சென்ற நிலையில் கடலில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டது. மாலுமி தனிஸ்லாஸ், தூத்துக்குடி துறைமுகத்தில் செயல்படும் அவசரகால மீட்பு மையத்திற்கு வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காப்பாற்றும் படியும் கூறினார்.
ஆனால் துறைமுக நிர்வாகம் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் இறங்கவில்லை. கடலோர பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் மாலுமி தனிஸ்லாஸ்(57) மற்றும் ஊழியர்கள் அந்தோணி (58), ஜான்டோ (35), ரோலண்ட் (34), சுபிகர் (18), ராயன்பர்னான்டோ (21), அந்தோணி ராஜ் (42), ஜோசப் உட்பட 12 பேரும் கடலில் மூழ்கி இறந்தனர்.
இறந்தவர்களில் ஜோசப் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. மற்ற 11 பேரின் உடல்கள் மீட்கப்படவில்லை. இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி 2வது விரைவு கோர்ட்டில், 2003 ஜூனில் நஷ்டஈடு கோரி 12 பேரின் குடும்பத்தினரும் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். 12 வழக்குகளிலும் தீர்ப்பளிக்கப் பட்டது.
கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கும் தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் 32 லட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாயும், இதுவரை 7.5 சதவீத வட்டியுடன் வழங்கும்படி, நீதிபதி கிருஷ்ணவேணி தீர்ப்பளித்தார்.
Leave a Reply