கொஞ்சமாக நூல் விலை குறைந்தாலும் 30 ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு : குளிர் கால ஆடை தயாரிப்பில் சிக்கல்

posted in: மற்றவை | 0

திருப்பூர்: நூல் விலை சிறிது குறைந்திருந்தாலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் 30ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

25ம் நம்பர் நூலை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை நீடிப்பதால் குளிர்கால ஆடை உற்பத்தியில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் பனியன் உற்பத்திக்கு தேவையான, காட்டன் ஒசைரி நூல், மதுரை, திண்டுக்கல், வேடசந்தூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய பருத்திக் கழகத்தின் தவறான கொள்கையால் ஒட்டுமொத்த பனியன் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
இதனால், நூற்பாலைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசின் பிரதிநிதிகள் நூல் விலையை குறைக்க வலியுறுத்தினர். நிர்பந்தத்தை ஏற்ற நூற்பாலைகளும் மே முதல் கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைப்பதாக உறுதி அளித்தன. இதில், 30ம் நம்பர் நூலை தவிர, அனைத்து ‘கவுன்ட்’களுக்கும் ஐந்து ரூபாய் விலை குறைப்பு செய்யப்பட்டது.
பனியன் உற்பத்தியில் காட்டன் ஒசைரி 30ம் நம்பர் நூல்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும். தற்போது, இந்த நூலுக்கு கிலோவுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேவையான அளவுக்கு நூல் வழங்கப்படுவதில்லை. எனவே, அவசர தேவைக்கு 25ம் நெம்பர் நூலை வாங்கி பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், உற்பத்தி செலவு மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டிப்) தலைவர் மணி கூறியதாவது: ஒரு கிலோ 30ம் நம்பர் நூல் இருந்தால், ஐந்து ஆடைகள் தயாரிக்கலாம். 25ம் நம்பர் நூலில் நான்கு ஆடைகள் மட்டுமே தயாரிக்க முடியும். நூல் விலை குறைக்கப்பட்ட தகவல் வெளியானதும் 30 ம் நம்பர் நூல் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது.
தேவையான அளவு நூலை வழங்கினால், விலை மேலும் குறைந்துவிடும் என்பதால், நூல் உற்பத்தி குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது. குளிர்கால ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் போது, 1.50 கிலோ நூலுக்கு இரண்டு ஆடைகளை மட்டுமே தயாரிக்க முடியும். தடிமனான ஆடைகள் வேண்டியிருப்பதால், நூலின் தேவையும் தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளன. குளிர்கால ஆடைகளை தயாரிக்க நூல் அதிகம் தேவை. தட்டுப்பாடு ஏற்படும் போது, விலை உயர மீண்டும் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டுகளில், தினமும் 20 கோடி ரூபாய் அளவுக்கு நூல் விற்கப்பட்டது; தற்போதும் அதே தொகைக்கு விற்கப்பட்டாலும், நூல் அளவில் 30 சதவீதம் குறைந்திருக்கும். நூல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடைவிதிப்பது ஒன்றுதான் தீர்வாக அமையும். இவ்வாறு, மணி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *