கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தலிபான் தலைவர் வீடியோ பேட்டி

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருதப்படும் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கி முல்லா மெஹ்சூத், அமெரிக்காவை பழிவாங்கப்போவதாக பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை அமெரிக்கா ஒழித்த பின் பெரும்பாலான தலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் தஞ்சம் புகுந்தனர். பாகிஸ்தானில், ‘தெஹ்ரிக் – இ- தலிபான்’ என்ற பெயரில் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகள், ஆளில்லாத விமானம் மூலம் பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தலிபான்கள் மீது குண்டுகளை வீசி அழித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டார்.இவரை தொடர்ந்து ஹக்கி முல்லா மெஹ்சூத் தலிபான் தலைவரானார். கடந்த ஜனவரியில் வாசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் மூலம் போடப்பட்ட குண்டு வெடித்து ஹக்கி முல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.இதற்கிடையே அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக பேசும் ஹக்கி முல்லாவின் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஒன்பது நிமிடம் ஒளிபரப்பாகக் கூடிய இந்த வீடியோவில் மெக்சூத் குறிப்பிடுகையில், ‘விரைவில் எங்கள் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை தாக்குவார்கள். நோட்டோ படைகள் அமெரிக்காவுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், ஐரோப்பிய நாடுகளும் எங்கள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்’ என எச்சரித்துள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று முன்தினம் செயலிழந்த குண்டு ஒன்று காரில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘அமெரிக்காவை அழிக்க நாங்கள் வைத்த குண்டு சரியான நேரத்தில் வெடிக்கவில்லை’ என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால், ‘காரில் இருந்த வெடிகுண்டுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *