சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில், மருத்துவ பட்டப்படிப்பை துவங்க விரைவில் அனுமதி கிடைக்கும், என இக்கல்வி நிறுவனத்தின் இயக்குனர் அனந்த் கூறினார்.
மருத்துவ தொழில்நுட்ப கருவிகள் தயாரிப்பு நிறுவனமான, டிரிவிட்ரான் ஹெல்த் கேர், சென்னை ஐ.ஐ.டி.,யின் பொறியியல் வடிவமைப்பு துறையுடன் இணைந்து, மருத்துவ உபகரணங்கள் வடிவமைப்பு, மேம்பாட்டிற்கான ஆராய்ச்சி மையத்தை துவங்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் அனந்த், டிரிவிட்ரான் குழும நிர்வாக இயக்குனர் வேலு, நேற்று கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து வேலு கூறியதாவது: கடந்த 1995ம் ஆண்டு வரை, மருத்துவ தொழில்நுட்ப கருவிகளை வளர்ந்த நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்த சீனா, தற்போது இத்துறையில் தன்னிறைவு பெற்றுவிட்டது. இன்றும் நாம், 85 சதவீதம் மருத்துவ கருவிகளை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்கிறோம். மருத்துவ செலவு அதிகமாக இதுவே முக்கிய காரணம். மருத்துவமனைகள், மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், டிரிவிட்ரான் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படுகிறது.
இம்மையத்தில் முதல் கட்டமாக, இதயம், சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை கருவிகள், ஆய்வக பணிகளுக்கான உபகரணங்களை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படும். எட்டு விஞ்ஞானிகள், ஐ.ஐ.டி., பேராசிரியர்களுடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வர். இவ்வாறு வேலு கூறினார். சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் அனந்த் கூறும்போது,”எங்கள் கல்வி நிறுவனத்தில், பொறியியல் பட்டப் படிப்புகளுடன், மருத்துவ பட்டபடிப்பையும் துவங்க அனுமதி கோரிவுள்ளோம்.
மத்திய சுகாதாரத் துறை விரைவில் இதற்கு அனுமதி தருமென எதிர்பார்க்கிறோம். 200910ம் கல்வியாண்டில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான ஆராய்ச்சி பணிகளை, சென்னை ஐ.ஐ.டி., மேற்கொண்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில், பேராசிரியர் கிருஷ்ணகுமார், டாக்டர்கள் பாலகிருஷ்ணன், புவனேஸ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave a Reply