ஐதராபாத் : காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என, ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர், பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் விமர்சித்து வருகின்றனர். பிரதமராக இருந்தாலும், கட்சித் தலைவராக இருந்தாலும் தவறு செய்தால், அதை சுட்டிக் காட்டும் உரிமை தங்களுக்கு உள்ளதாக கடப்பா பகுதியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள் குறிப்பிட்டுள்ளனர். மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்களான இந்த எம்.எம்.ஏ.,க்களின் நடவடிக்கைக்கு, முதல்வர் ரோசய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரோசய்யா குறிப்பிடுகையில், “என்னைப் பற்றி கண்டனம் செய்பவர்களைப் பற்றி கவலையில்லை. ஆனால், கட்சியின் மேலிடத் தலைவர்களான சோனியா, மன்மோகன் சிங் போன்றவர்களை விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சிப்பது, கட்சியின் ஒழுக்கத்தை மீறுவதாக அமையும். கட்சித் தலைவர்களை மதிக்க வேண்டும். ஏதாவது பிரச்னையிருந்தால், கட்சிக் கூட்டத்தில் பேசி தீர்த்துக் கொள்ளலாம்’ என்றார்.
“கட்சித் தலைவர்களுக்கெதிரான கருத்தை தெரிவிக்கக்கூடாது’ என, மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாசும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply