ராஞ்சி : ஜார்க்கண்டில் நிலையற்ற அரசியல் காரணங்களால், அடிக்கடி ஆட்சி மாறுவதால், வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதோடு, தொழில் துறையும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
கடந்த 2000ம் ஆண்டில் பீகாரில் இருந்து பிரிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவானது. இதுவரை இங்கு ஏழு முதல் வர்கள் பதவி வகித்து விட்டனர். பல முறை ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. கவர்னர்களும் அடிக்கடி மாற்றப்படுகின்றனர்.தற்போதும், வெட்டுத் தீர்மான விவகாரத்தில் சிபுசோரன் ஏற்படுத்திய குழப்பம் காரணமாக, ஜார்க்கண்டில் ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளது. சிபுசோரனுக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – பா.ஜ., கட்சிகளுக்கு இடையே பேச்சு நடந்து வருகிறது. அடிக்கடி நிகழும் ஆட்சி மாற்றங்களால், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் முடங்கி கிடப்பதாகவும், சாதாரண வேலைகள் கூட நடக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.ஜார்க்கண்ட் மாநில முன்னாள் டி.ஜி.பி., பிரசாத் கூறுகையில், ‘அடிக் கடி முதல்வர்கள் மாறுகின்றனர். ஆட்சி மாற்றமும் நடக்கிறது. இதனால், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளன. அதிகாரிகள், தங்கள் வேலைகளை சரிவர கவனிப்பது இல்லை’ என்றார்.ராஞ்சி பல்கலை பொருளாதார பேராசிரியர் ரமேஷ் சரண் கூறுகையில், ‘அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதால், வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன.
இது மட்டுமல்லாமல், ஊழலும் அதிகரித்து விட்டது. அதிகாரிகள் வேலை செய்வது இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை பல முறை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து விட்டன. தற்போதுள்ள சூழ்நிலையில் மேலும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.
ஜார்க்கண்ட் சிறு தொழில் துறை செயலர் யோகேந்திர குமார் ஓஜா கூறுகையில், ‘நிலையற்ற அரசியல் போக்கு நிலவுவதால் ஜார்க்கண்டில் தொழில் துறை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அதிகாரிகள் கோப்புகளில் கையெழுத்திடுவது இல்லை. தற்போது எங்களுக்கு நிலக்கரி அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால், இதற்கான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்’ என்றார்.
Leave a Reply