தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வருமா : முதல்வர் கருணாநிதி பேட்டி

posted in: அரசியல் | 0

tblfpnnews_60697138310தமிழகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடத்தப்படுவற்கான சூழ்நிலை ஏதும் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவை, தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார். ஜன்பாத் இல்லத்தில் காலை நடைபெற்ற இந்த சந்திப்பில், முதல்வர் கருணாநிதியை மலர்க்கொத்து அளித்து சோனியா வரவேற்றார். பின், இல்லத்திற்குள் சென்ற இரு தலைவர்களும் அரை மணி நேரம் வரை பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியில் வந்த முதல்வர் கருணாநிதி அங்கிருந்த நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:சோனியாவிடம், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றுவது குறித்து பேசினேன். தமிழகத்திற்கு தேவையான கூடுதல் அரிசி வழங்கவேண்டுமென்றும் அதற்கு பரிந்துரை செய்யும்படியும் கேட்டுக் கொண்டேன்.ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவதில் பிரச்னை ஏதும் இல்லை. எனவே அதுபற்றி பேசவில்லை. இவ்வாறு கருணாநிதி கூறினார்.

அப்போது அவரிடம்,’சோனியாவிடம் அரசியல் ரீதியாக ஏதாவது பேசினீர்களா? வரவிருக்கின்ற தமிழக சட்டசபை தேர்தலை பற்றி பேசினீர்களா?,’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ‘அதற்கு இப்போது ஒன்றும் அவசரம் இல்லை,’ என்றார்.தவிர, சேதுசமுத்திர திட்டம் குறித்து பேசினீர்களா என்ற கேள்விக்கு அதுபற்றி பேசவில்லை என்றும் முதல்வர் பதிலளித்தார்.

இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்த தகவல்: இந்த சந்திப்பின் நோக்கமே பல்வேறு அரசியல் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு மாதத் திற்குள் மாற்றம் செய்யப்படவுள்ளது. அப்போது தி.மு.க., வின் சார்பில் நிச்சயம் ஒருசிலர் மாற்றப்பட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படப்போவது உறுதி.தவிர, ராஜ்யசபாவுக்கான தேர்தலும் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரசுக்கு மேலும் ஒரு சீட் அளிப்பதா வேண்டாமா என்றும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஏதும் தரலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டியிருந்தது.தவிர, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் அதில் சாதகம் அதிகம் இருக்கும் என்ற கருத்து இருக்கிறது. எனவே அதுகுறித்து முடிவெடுக்க வேண்டுமானால் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிந்தாக வேண்டும். எனவே, இந்த சந்திப்பின்போது சோனியாவுடன் இந்த பிரச்னைகள் குறித்தெல்லாம் முதல்வர் கருணாநிதி 30 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *