தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை

posted in: உலகம் | 0

srilankaகொழும்பு, மே 11: இலங்கையில் தமிழர்களை இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை அதிபர் மகிந்த ராஜபட்ச தொடங்கியிருக்கிறார் என்றும் இந்த முயற்சியின் தொடர்ச்சியாக செய்யப்படும் திருத்தங்கள் தங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இலங்கையில் இப்போது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அந்தந்த அரசியல் கட்சிக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வசித்த தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த போரினால் சிதறடிக்கப்பட்டு அகதி முகாம்களிலும் பிற பகுதிகளிலும் பிரிந்து வாழும் இந்த நிலையில்கூட, விகிதாசாரப் பிரதிநிதித்துவம் காரணமாக 11 இடங்களில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற முடிந்திருக்கிறது.

தமிழர்கள் மட்டும் அல்லாமல் முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற சிறுபான்மை இன மக்களும் கெüரவமான பிரதிநிதித்துவம் பெற இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே உதவி வருகிறது.

இந்த நிலையில் இதை மாற்றி, ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் மூலம் முதலிடத்தைப் பெறும் வேட்பாளரே (இந்தியாவில் உள்ளதைப் போல), அந்தத் தொகுதியின் பிரதிநிதி என்று அறிவிக்க இலங்கையின் அரசியல் சட்டம் திருத்தப்படவிருக்கிறது.

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் ஏராளமானோர் போரில் இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் சிதறிவிட்டனர். இந்த நிலையில் அந்த இடங்களில் சிங்களர்கள் திட்டமிட்டு அதிக எண்ணிக்கையில் குடியமர்த்தப்படுகின்றனர். இதனால் வடக்கு, கிழக்குப்பகுதிகளில்கூட ஒவ்வொரு தொகுதியிலும் தமிழர்களைவிட சிங்களர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பர். அதிக வாக்குகளைப் பெறும் முதல் வேட்பாளர் என்றால் சிங்களர்தான் வெற்றி பெறுவார். தமிழர்கள் கணிசமாக இருந்தாலும் அவர்களுக்குப் பிரதிநிதித்துவமே இருக்காது.

இதனால் மத, மொழி, இனச் சிறுபான்மை மக்கள் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் அவர்களுடைய பிரதிநிதித்துவமே நாடாளுமன்றத்தில் இல்லாமல் போய்விடும்.

இதனால் இலங்கை அரசு சிறுபான்மைச் சமூக மக்களுக்கு எதிராகக் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பே இருக்காது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கப்படாவிட்டால் அது வெளியுலகுக்குத் தெரியவே தெரியாது. அத்துடன் சிறுபான்மைச் சமூக மக்களின் நலனுக்காக உளப்பூர்வமாக வாதாடவும், கோரிக்கைகளை வலியுறுத்திப் பெறவும் பிரதிநிதிகளே இல்லாமல் போய்விடுவார்கள். எனவே தமிழர்களால் இதை ஏற்க முடியாது என்று தமிழர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழர்கள் கோரிவரும் சுயாட்சி அதிகாரம், அதிகாரப் பகிர்வு, தமிழர்களின் பாரம்பரிய வசிப்பிட அங்கீகாரம் ஆகியவை குறித்து அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள சட்ட திருத்தத்தில் ஏதும் இல்லை; மாறாக, தமிழர்களின் நலனுக்கு எதிரான யோசனைகளே உள்ளன என்று தெரிவித்தார் யாழ்ப்பாண பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன்.

இலங்கை நாடாளுமன்றத்தின் 225 தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நீக்கிவிட்டு, தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பெறுகிறவரே வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படும் முறைக்கு சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்று இலங்கை அமைச்சர்கள் சுசீல் பிரேமஜயந்தவும் மைத்ரிபால சிறிசேனவும் திங்கள்கிழமை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

25 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை, செனட் என்று அழைக்கப்படும் என்றும் அதில் சிறுபான்மைச் சமூக மக்களுக்கும் மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்படும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

இலங்கை நாடாளுமன்றம் இயற்றும் ஏதேனும் ஒரு சட்டம் ஒரு மாநிலத்தின் நலனைப் பாதிக்கும் என்று கருதப்பட்டால், அந்த மாநிலப் பேரவையின் ஒப்புதலை மத்திய அரசு பெற வேண்டும் என்று இப்போதுள்ள சட்டம் வலியுறுத்துகிறது. இதுவும் திருத்தப்பட்டு, செனட் அனுமதித்தால் எந்த சட்டத்தையும் நாடாளுமன்றம் இயற்றிக் கொள்ளலாம் என்று அனுமதிக்க வழி செய்யவிருக்கிறது.

இதுவும் மாநிலங்களின், அதிலும் குறிப்பாக தமிழர்கள் போன்ற சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதிப்பதற்காகவே கொண்டுவரப்படுகிறது என்று தமிழர் தேசிய கூட்டணிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையின் அதிபராக ஒருவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று இப்போதுள்ள சட்டம் கூறுகிறது. இதையும் திருத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் அதிபராகப் பதவி வகிக்கலாம் என்று அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதிபர் ராஜபட்ச தன்னை நிரந்தர அதிபராக நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியே இது. இதுவும் போதாது என்று தமிழர்களின் தொகுதிகள் பிரிக்கப்பட்டு மறுவரையறை செய்யப்பட உள்ளன. அதன்படி தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகள் பிரிக்கப்பட்டு சிங்களர்களின் பகுதிகளோடு சேர்க்கப்பட்டு எல்லா தொகுதிகளிலும் சிங்களர்களே வெற்றி பெற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தமிழர்கள் மட்டும் சிதறாமல் இருந்திருந்தால் நடந்துமுடிந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணிக்கு யாழ்ப்பாண தீபகற்பத்தில் மட்டும் 11 தொகுதிகள் கிடைத்திருக்கும், மாறாக 9 தான் கிடைத்தன என்று சுரேஷ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *