சென்னை: “தற்காலிக பணியாளர்களுக்கும் பி.எப்., சட்டம் பொருந்தும். அவர்களை விலக்கி வைப்பதை ஏற்க முடியாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் கடம்பாடியில் நியூ ஸ்டார் ஆங்கில பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பி.எப்., தொகையில் நிர்வாகத்தின் பங்கீடு செலுத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக நிர்வாகத்தின் பங்கீடு செலுத்தப்படாததால், அதை வசூலிக்க பி.எப்., அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஒன்பது ஆண்டுகளுக்கு 58 ஆயிரத்து 412 ரூபாய் செலுத்த வேண்டும் என திருச்சியில் உள்ள உதவி பி.எப்., கமிஷனர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இல்லை. சில நேரங்களில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றியுள்ளனர். பெரும்பாலான ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றுகின்றனர். எனவே, பி.எப்., சட்டம் பொருந்தாது’ என கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: சில நேரங்களில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றியிருப்பதாக பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. தனது பொறுப்பில் இருந்து நிர்வாகம் தப்பிக்க முடியாது. 20க்கும் மேற்பட்டோர் பள்ளியில் பணியாற்றுவதாக, ஆவணங்களை சரிபார்த்த பின் அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, பி.எப்., உதவி கமிஷனரின் முடிவில் குறுக்கிட விரும்பவில்லை. தற்காலிக ஊழியர்களுக்கும் பி.எப்., சட்டம் பொருந்தும். தற்காலிக ஊழியர்களை விலக்கி வைப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, பி.எப்., உதவி கமிஷனர், டில்லியில் உள்ள பி.எப்., மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் எந்த குறைபாடும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply