புதுடில்லி:”ரவீந்திரநாத் தாகூரின் ஓவியங்கள் லண்டனில் ஏலம் விடப்படுவது தொடர்பான விவகாரத்தை அரசு விசாரிக்கும். இருந்தாலும், அந்த ஓவியங்களுக்கு சட்டப்படி அரசு உரிமை கோர முடியாது’ என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற பிரபல கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், லண்டனில் உள்ள டர்டிங்டன் ஹால் எஸ்டேட்டுக்கு முன்பு அடிக்கடி சென்றுள்ளார். அங்கு அவர் ஏராளமான ஓவியங்களை வரைந்தார். அந்த ஓவியங்களில் சில, தற்போது டர்டிங்டான் ஹால் நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளன. இந்த ஓவியங்களை அடுத்த மாதம் 15ல் ஏலம் விட, டர்டிங்டான் ஹால் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள், இந்த ஏலத்தை தடுத்து நிறுத்தி, அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து வரும் குழுவின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:ரவீந்திரநாத் தாகூரின் ஓவியங்கள் ஏலம் விடப்படுவது தொடர்பான விவகாரம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து அரசு விசாரிக்கும். இருந்தாலும், இந்த ஓவியங்களுக்கு சட்டப்படி நாம் உரிமை கோர முடியாது. மகாத்மா காந்திக்கு சொந்தமான பொருட்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்படுவதை தடுக்க, பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருந்தை இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
Leave a Reply