நண்பனை காப்பாற்றிய சச்சின் : ‘ஆபரேஷன்’ செலவை ஏற்றார்

posted in: மற்றவை | 0

tblfpnnews_48107111455ஆமதாபாத் : கிரிக்கெட் அரங்கில் சாதனை நாயகனான சச்சின், சேவைப் பணிகளிலும் அசத்துகிறார். விபத்தில் படுகாயமடைந்த தனது நண்பனின் ‘ஆபரேஷன்’ செலவை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின். இவரது இளமைக் கால நண்பர் தான் ‘ஆல்-ரவுண்டர்’ தல்பிர் சிங் கில். இருவரும் 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். அப்போது ஒரே ‘ரூமில்’ தங்கியுள்ளனர். ஒன்றாக பயிற்சி செய்துள்ளனர். காலம் மாறியது; காட்சிகள் மாறின. இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற சச்சின், ‘கிரிக்கெட் கடவுளாக’ உருவெடுத்தார். மறுபக்கம் தல்பிர் சிங்கை துரதிருஷ்டம் துரத்தியது. கடந்த 2002ல் பைக்கில் சென்ற இவர், ‘டாங்கர்’ லாரி மீது மோதி, பெரும் விபத்தில் சிக்கினார். இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சுமார் 8 மாதங்களுக்கு ‘கோமா’ நிலையில் இருந்துள்ளார். கால்கள் பாதிக்கப்பட்டதால், நடக்க முடியாது. மூளையில் காயம் ஏற்பட்டதால், பேசும் திறனையும் சிறிது காலத்துக்கு இழந்தார். பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமானால், இடுப்பு பகுதியில் 6 லட்ச ரூபாய் செலவில் ‘ஆபரேஷன்’ செய்ய வேண்டுமென டாக்டர்கள் கூறியுள்ளனர்.

‘ஆபரேஷன்’ வெற்றி: இதைக் கேட்ட தல்பிர் குடும்பம் ஆடிப் போயுள்ளது. அந்த நேரத்தில் தான் சச்சின் பெயர் நினைவுக்கு வந்துள்ளது. உடனே தல் பிரின் தாயார் சுக்தயால் கவுர், கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளார். இதனை பார்த்ததும் நெஞ்சம் பதறிய சச்சின், பழைய நட்பை மறக்காமல், மிகுந்த பெருந் தன்மையுடன் முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து நேற்று ஆமதாபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ‘ஆபரேஷன்’ வெற்றிகரமாக நடந்தது.

இது குறித்து தல்பிர் கூறுகையில்,”எனது ‘ஆபபரேஷன்’ செலவை ஏற்று, மிகப் பெரும் உதவி செய்துள்ளார் சச்சின். அவருக்கு கடமைப்பட்டுள்ளேன். ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்ட பின், அவரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவிப்பேன்,”என்றார். சுக்தயால் கவுர் கூறுகையில்,”எனது மகனின் மருத்துவ அறிக்கையை இணைத்து சச்சினுக்கு கடிதம் அனுப்பினேன். கடிதம் கிடைத்த சில மணி நேரத்தில், தனது நண்பனின் ‘ஆபரேஷன்’ செலவு அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்,”என்றார்.

மீண்டும் புன்னகை: இது குறித்து சச்சின் கூறுகையில்,”தல்பிர் வாழ்வில் மீண்டும் புன்னகையை கடவுள் கொடுக்க வேண்டும். ‘ஆபரேஷன்’ வெற்றிகரமாக நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவரது மருத்துவ ‘ரிப்போர்ட்டை’ இந்திய கிரிக்கெட் போர்டின் மருத்துவ ஆலோசகர் ஆனந்த் ஜோஷிக்கு அனுப்பியுள்ளேன். அவரது பதிலுக்காக காத்திருக்கிறேன்,”என்றார். ஏற்கனவே மும்பையில் உள்ள ‘அப்னாலயா’ அமைப்பின் மூலம் 200 ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் சச்சின் ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது நண்பரின் சிகிச்சைக்கு உதவி, அவரது வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *