சென்னை : அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், அகால மரணம் அடைந்த தொண்டரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் என, மொத்தம் 24 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவியாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலை ஜெயலலிதா வந்தார். அவரை அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 92 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 23 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக ஜெயலலிதா வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் நடைபெற்ற மே தின பேரணியில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போது அகால மரணமடைந்த சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதியின் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாயை ஜெயலலிதா வழங்கினார். இன்ஜினியரிங், நர்சிங் மற்றும் டிப்ளமோ ஆகிய பாடப் பிரிவில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக்கு தேவைப்படும் முழுத் தொகையாக 3 லட்சத்து 41 ஆயிரத்து 100 ரூபாயை, அண்ணா அறக்கட்டளையிலிருந்து ஜெயலலிதா வழங்கினார்.
அ.தி.மு.க.,வின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வரும் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணியின் சார்பில், ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்வதற்கு வசதியாக கண் பரிசோதனை கருவி பொருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள டெம்போ டிராவலர் வாகனத்தை, ஓட்டுனர்களின் பயன்பாட்டிற்காக ஜெயலலிதா துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply