நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை தொழில்நுட்பக் கல்வி

posted in: கல்வி | 0

சர்க்கரை, கிராணைட், வேளாண் சார்ந்த பொருட்கள், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், பவர் ஜெனரேஷன், கல்வி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, ஹெல்த் கேர் ஆகிய துறைகளில் முத்திரை பதித்துள்ள இக்குழுத்தின் ஒரு அங்கம் தான் 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட பண்ணாரி அம்மன் கல்வி அறக்கட்டளை.

இந்த அறக்கட்டளையின் கீழ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வருகிறது தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம். நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கி, கிராமப்புற மாணவர்களுக்கும் பொறியியல் கல்வியை வழங்கும் உன்னத பணியை செய்து வருகிறது.

இக்கல்வி நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான எஸ்.வி. பாலசுப்ரமணியம் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:

* பல்வேறு தொழில்களில் சிறப்படைந்து வரும் பண்ணாரி அம்மன் குழுமம், பொறியியல் கல்லூரி துவங்க காரணம் மற்றும் இக்கல்லூரியின் சிறப்புகள் என்ன?
சத்தியமங்கலத்தை மையமாகக் கொண்டு துவங்கப்பட்ட எனது பல்வேறு தொழில்கள் மிகச் சிறந்த வெற்றி அடைந்துள்ளன. இப்பகுதி மக்களுக்கு திரும்ப நல்லது செய்ய நினைத்தேன். அதில் உருவானது தான் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி. 176 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இக்கல்வி நிறுவனம். கட்டட பரப்பளவு மட்டும் 17 லட்சம் சதுர அடி. 11 இளநிலை பட்டப்படிப்புகள், 12 முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன. 22 எம்.பி.பி.எஸ்., வேகத்தைக்கொண்ட இண்டெர்நெட் வசதி உள்ளது. தேவையான வசதிகளுடன் 100 வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், ஆடியோ வீடியோ வசதிகள் கொண்ட 6 ஏ.சி., கருத்தரங்கு ஹால், மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதிகள், வளாக நேர்காணல் மூலம் ஆண்டுதோறும் பிரபல நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்பு என இக்கல்வி நிறுவனத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

* நாட்டு வளர்ச்சியில் தொழில்நுட்ப கல்வியின் பங்கு என்ன என்று நினைக்கிறீர்கள்?
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆச்சரியப்படும் அளவிற்கு, உலக நாடுகளின் மத்தியில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை இந்தியா மற்றும் சீனா ஆகியவை பெற்றுள்ளன. இதற்கு அதிக மக்கள் தொகை மற்றும் இயற்கை வளங்கள் அடிப்படை ஆதாராமாக விளங்குகிறது. இந்திய மக்கள் தொகையில் அதிக சதவீதத்தினர் இளைஞர்களாக இருப்பது ஒரு முக்கிய அம்சம். இந்த சிறப்புகளை மட்டும் கொண்டிருந்தால் போதாது; அந்த வளங்கள் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வளர்ச்சி இன்ஜினியரிங் கல்வி மூலமாக சிறப்படையச் செய்ய முடியும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சிறப்பான கல்வி வழங்க தற்போதைய தேவை மற்றும் எதிர்கால திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டம் அவசியம். பண்ணாரி அம்மன் கல்வி நிறுவனம் ஒரு தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரியாக இருப்பதால், துறையின் மாற்றத்திற்கும், தேவைக்கும் ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றிக்கொள்ளவும், நவீன பாடத்திட்டத்தை சேர்க்கவும் முடிகிறது. இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டம் நவீனப் படுத்தப்படுகிறது.

சிறப்பான கல்வி வழங்க பாடத்திட்டத்துடன், அனுபவமிக்க மற்றும் துறை சார்ந்த நவீன மாற்றங்களை அறிந்த ஆசிரியர்கள் தேவை. பண்ணாரி அம்மன் கல்லூரியில் தற்போது பிஎச்.டி., பட்டம் பெற்ற 52 பேராசிரியர்கள் உள்ளனர். துறை சார்ந்த மாற்றங்களை ஆசிரியர்கள் அறிந்துகொள்ளும் வகையில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு இக்கல்லூரியைச் சேர்ந்த 102 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி போதிப்பதுடன், பகுதிநேர ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.60 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

* தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிய பொறியியல் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் துவங்கப்படுவது வரவேற்கத்தக்கதா?
தற்போதுள்ள நிலையில், இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான கல்வி நிறுவனங்கள் இல்லை. பள்ளி படிப்பை முடித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தற்போது உயர்கல்வி அளிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு பற்றாக்குறை உள்ளது. வட மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. தென் மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவது மிகவும் வரவேற்கத்தக்கது.

* பொறியியல் கல்வி இடங்கள் அதிகரித்து வருவதற்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் உள்ளனவா?
அனைத்து படிப்பிற்கும் வேலை வாய்ப்பு உண்டு. இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை என்ற நிலை தற்போது இல்லை என்று சொல்லலாம். வேளாண் துறையானாலும் சரி, டெக்ஸ்டைல் துறையானாலும் சரி ஆட்கள் பற்றாக்குறையே நிலவுகிறது. அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதற்கான தகுதிகளை பெற்றிருக்கிறோமா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். வேலைக்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டால், அனைவருக்கும் வேலை நிச்சயம் கிடைக்கும்.

* ஒரே பாடப்பிரிவை பலரும் தேர்வு செய்யும் போக்கு இன்றைய மாணவர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறதே…!
முன்பு தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.,) படிப்புகளை அதிகளவில் மாணவர்கள் விரும்பி எடுத்தனர். சமீபத்தில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார சரிவால் மெக்கானிக்கல் துறை பக்கம் திரும்பினர். தற்போது மாணவர்களின் விருப்பம் சிவில் இன்ஜினியரிங் பக்கமும் திரும்பியுள்ளது. இப்படிப்புக்கு சிறப்பான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக வாய்ப்புகள் இத்துறைக்கு உள்ளன.

* கல்லூரி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது பற்றி உங்களது கருத்து?
மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பது அவசியம். பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கட்டுப்பாடு மிகுந்த கல்லூரி என்று கூறப்படுவது உண்டு. அதே சமயம், அவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்வதில் முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டிலேயே யோகா, தியானப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, படிப்பில் முழு ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறோம். படிப்பில் சராசரி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் இலவசமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அடுத்த ஓரிரு மாதங்களிலேயே சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், ஒரே நேரத்தில் பல்வேறு பாடத் தேர்வுகளை எழுத வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதால், கல்லூரியில் இருந்து இடைநிற்றல் என்ற நிலையும் இக்கல்லூரியில் இல்லை. தன்னாட்சி அங்கீகாரம் பெற்று விளங்குவதால், உடனடி தேர்வு முறை இக்கல்லூரில் சாத்தியமாகிறது.

வீட்டில் தங்கி இருந்து கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவியர் போக்குவரத்திலேயே தினமும் சில மணிநேரங்களை வீணாக்க வேண்டியுள்ளது. இதனால் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவ, மாணவியரில் 85 சதவீதத்தினர் விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர். இவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள நூலகங்கள், ஆய்வகங்களை 24 மணிநேரமும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இதர திறன்களை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். போட்டோகிராபி, விரும்பிய விளையாட்டுகள், இதர மொழிப் பயிற்சி போன்ற திறன்களுக்கு முழு ஆதரவு அளித்து ஒரு ‘குருகுலம்’ போல் இக்கல்லூரி செயல்படுகிறது.

கிராமப்புற மாணவர்களும் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெறும் அளவிற்கு நவீன ‘மொழி பயிற்சி ஆய்வகம்’ இக்கல்லூரியில் உள்ளது. இங்கு ஆங்கிலம் மட்டுமின்றி, ஜாப்பனிஸ், ஜெர்மன், பிரஞ்ச் போன்ற அயல்நாட்டு மொழிகளும் அனுபவமும், புலமையும் மிக்க ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. ஜாப்பனிஸ் மொழியில் தற்போது 160 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு ஜப்பானிய ஆசிரியரால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

* இந்தாண்டு முதல் தமிழ் வழியில் பொறியியல் படிப்பு வழங்கப்பட உள்ளதே… இது வரவேற்கத்தக்கதா?
ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் அவர்களது தாய்மொழியிலேயே அனைத்து புரொபஷனல் படிப்புகளை படிக்கின்றனர். சாதனை படைத்தும் வருகின்றனர். எனவே, பொறியியல் படிப்பு தமிழ் வழியிலும் தேவையானது தான். ஆனால், தமிழ் வழியில் பொறியியல் படிப்பவர்களால், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறுவது கடினம். மற்றபடி, தமிழகத்திலேயே வேலை வாய்ப்புகளை பெற முடியும்.

* பிற கல்வி நிறுவன மாணவர்களுடன், பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு பரிமாற்ற வாய்ப்புகள் குறித்து…
பிற கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களையும் வெளிக்கொணறும் வகையில் ஆண்டுதோறும் ‘ப்யூச்ரா’ என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதில் நாடு முழுவதிலும் உள்ள பொறியியல், தொழில்நுட்பம், அப்ளைடு சயின்சஸ் மற்றும் மேலாண்மை மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2009ம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்து 245 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்நிகழ்ச்சி தொழில்நுட்ப பரிமாற்றம் மட்டுமின்றி, கலாச்சார பரிமாற்றத்திற்கும் ஏதுவாக அமைந்துள்ளது.

* இன்றைய இளைய தலைமுறையினருக்கு உங்களது ‘அட்வைஸ்’?
‘நல்லதையே நினை, நல்லதையே செய்’ என்ற சொல்லை நேரடியாக சொன்னால் பொதுமக்களுக்கு சென்றடையாது என்பதாலேயே, நன்னெறி கதைகள் மூலம் புராணங்களாக உருவாக்கப்பட்டு, உணர்த்தப்பட்டு வருகிறது. சில வரிகளில் சொல்லவேண்டுமானால், இளைஞர்கள் யாரும் தங்களை தாழ்த்தி எண்ணக்கூடாது. நீங்கள் மிகப் பெறியவர்கள்; சாதனையாளர்கள். இந்த எண்ணத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். பொதுவாக ஒவ்வொரு மாணவரும் பட்டப்படிப்பு முடித்தபிறகு, உடனடி வேலை, சொந்த தொழில், மேற்படிப்பு என மூன்று விதமான வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை மாணவர்கள் திட்டமிட்டு அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும்.

* பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றுள்ள ‘டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர்’ மையத்தின் செயல்பாடுகள்…
ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இக்கல்வி நிறுவனம், மத்திய அரசின் ஒத்துழைப்புடன் பயோ டெக்னாலஜி துறைக்கான ஆராய்ச்சிக் கூடத்தை இயக்கி வருகிறது. பயோ டெக்னாலஜி துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சியை இந்த மையத்தில் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் ஆய்வுகளுக்கு உரிய வழிகாட்டுதலுடம், ஆய்வக வசதி மற்றும் தயாரிக்கப்படும் ஒரு புதிய பொருளை விற்பனை செய்யவும் உதவி அளிக்கப்படுகிறது.

* கோவையில் தனியாக சிறப்பு பொருளாதார மண்டலத்தை நீங்கள் ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறதே!
கோவை காளப்பட்டி அருகே 75 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால், உலக பொருளாதார சரிவால் இதற்கான பணியில் தொய்வு ஏற்பட்டது. பிற நிறுவனங்களுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறோம்.

* கல்வி மேம்பாட்டில் உங்களது எதிர்கால திட்டங்கள்…
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது நான்காயிரத்து 500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஒரு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்று, நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உயர்த்த வேண்டும் என்பதே எங்களது லட்சியம். அதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு, தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும்.

மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்ற பண்ணாரி அம்மன் பள்ளி மாணவி

உயர்கல்வியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி ஒருபுறமும், பள்ளிக் கல்வியில் பண்ணாரி அம்மன் மெட்ரிக் பள்ளி மறுபுறமும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜிவ்நகரை சேர்ந்தவர் டாக்டர் சரவணன், டாக்டர் நிர்மலா தம்பதியரின் ஒரே மகள் பவித்ரா. சத்தி பண்ணாரியம்மன் மெட்ரிக் பள்ளியில், பத்தாம் வகுப்பு பயின்ற பவித்ரா, 495 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இவர், தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மாணவி பவித்ரா கூறுகையில், “அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரையும், இரவு 10 வரை படிப்பேன். ‘டிவி’ பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தேன். பள்ளியில் நடத்தப்படும் பாடங்களை வீட்டிலும் படிக்கும்போதும் ஆசிரியரை தொடர்புகொண்டு எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்வேன். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் எனக்கு தொடர்ந்து ஊக்கமும், ஒத்துழைப்பும் அளித்தனர். இதனால் தான், மாநில அளவில் முதலிடம் பெற முடிந்தது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிளஸ் 1ல் முதல் குரூப் சேர உள்ளேன்” என்றார்.

‘மாணவர்களின் திறன்கள வளர சரியான களம்’

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பி.இ., மெக்கானிக்கல் படித்த மாணவி திவ்யா தற்போது சென்னையில் உள்ள கேட்டர்பில்லர் இந்தியா நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

திவ்யா கூறுகையில், “எனது வகுப்பில் நான் ஒரே மாணவி. எனினும், அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக கல்வி கற்பித்ததோடு மட்டுமின்றி, சிறப்பாக படிக்கவும், இதர திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ஊக்கம் அளித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவியர் இக்கல்லூரியில் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், பலதரப்பட்ட கலாச்சார பரிமாற்றம் மற்றும் நட்புறவுக்கு சிறந்த இடமாக அமைந்தது. உடல், மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து யோகா – தியானப் பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் பங்கேற்க ஊக்குவிக்கின்றனர். பொதுவாக, இந்த கல்லூரியில் இருந்த அனைத்து நாட்களும் மகிழ்ச்சியான தருணங்கள்”, என்றார்.

‘வேலைவாய்ப்பு ஒரு பொருட்டே இல்லை’

இக்கல்லூரியில் எம்.எஸ்சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்து கோவை காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் மோனிஷ் கூறுகையில், “இக்கல்லூரியின் அனுபவமிக்க ஆசிரியர்கள் மிகுந்த நட்புணர்வோடு பழகும் தன்மை கொண்டுள்ளனர். கல்லூரியில் 24 மணிநேரமும் தேவையான பாட நூல்களை பெறவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவும் வாய்ப்பளிக்கின்றனர். கல்லூரி வளாகத்திலேயே துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் தங்கி இருந்து, தினமும் இரவு உணவுக்கு பிறகு, சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர். இதுதவிர, தேவைப்படும் மாணவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ அளிக்கின்றனர். கல்லூரி வளாக நேர்காணலிலேயே பெரும்பாலான மாணவர்களுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. வேலைவாய்ப்பு என்பது இக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரச்சனையே கிடையாது. வேலைக்கு சேர்ந்த பிறகும்கூட, எனது சில அலுவலக ரீதியான சந்தேகங்களுக்கும் எனது இக்கல்லூரி பேராசிரியர்கள் உரிய தீர்வு அளித்து வருகின்றனர்”, என்றார்.

‘கிராமப்புற மாணவரும் சாதிக்க முடியும்’

இக்கல்லூரியில் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து, சிங்கப்பூரில் உள்ள புரொடக்சன் இன்ஜினியரிங் ஆக பணிபுரியும் ஞானவேல் கூறுகையில், “நான் டிப்ளமோ முடித்து, லேட்ரல் என்ட்ரி முறையில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பி.இ., இரண்டாமாண்டு சேர்ந்தேன். எனக்கு முதலில் ஆங்கிலம் சரியாக தெரியாமல் தடுமாறினேன். எனினும், இக்கல்லூரி பேராசிரியர்கள் ஊக்கம் அளித்து சிறந்த தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு சிறப்பான மொழிப் பயிற்சி அளித்தனர். என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கும் ‘லேங்குவேஜ் லேப்’, ‘டிஜிட்டல் லைப்ரரி’ போன்ற வசதிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ‘ப்யூச்சிரா’ என்ற தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கு பெற்று எனது ‘புராஜெக்ட்’ சமர்பித்தேன். கல்லூரி சிறந்த மாணவன் என்ற விருதை பெற்றேன். டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் முதல் பரிசு பெற்றேன். இதற்கு கல்லூரியில் கிடைத்த அனைத்து விதான ஒத்துழைப்பும், ஊக்கமும் தான் முக்கிய காரணம்”, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *