மதுரை: தமிழக அரசு சமீபத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்களுக்கு இலவச உயர்கல்விக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தற்போது வினியோகிக்கப்படும் பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்தின் 26ம் பக்கத்திலும் அதற்கென தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.உங்கள் குடும்பத்தில்வேறு யாரும் பட்டதாரிகள் இல்லையா என கேட்டு, அதில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார் கையெழுத்து பெற்று வரும்படி தெரிவித்து உள்ளனர்.
பல பெற்றோரிடையே புதிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது. உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர் பட்டதாரியாக இல்லாத நிலையில், அவரது குடும்பத்தில் தந்தை அல்லது தாய் அல்லது சகோதரரில் சிலர் திறந்தநிலை பல்கலையில் பி.ஏ., எம்.ஏ., படித்துள்ளனர். தற்போது திறந்தநிலை பல்கலையில் பெற்ற பட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் பணியில் உள்ள சிலர் திரிசங்கு நிலையில் கூட உள்ளனர். அப்படி இருக்கும் போது, உயர்கல்விக்குச் செல்வோரின் குடும்பத்துக்கு இந்த தகுதி பொருந்துமா, இல்லையா என பெற்றோரும், மாணவரும், சான்றிதழ் அளிக்கும் அலுவலர்களும் கூட குழப்பத்தில் உள்ளனர். உயர்கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவே திறந்நிலை பல்கலையின் பட்டம் செல்லாது என்பதுதான். அது எல்லா வகையிலும் பொருந்தும் என்பதால், அங்கு பட்டம் பெற்றவர்களின் வாரிசுகளை இது பாதிக்காது’ என்றனர்.
Leave a Reply