தூத்துக்குடி: நாடு முழுவதும் லஞ்சப்பணம் விவகாரம் மூட்டைப்பூச்சிபோல பெருகி வருகிறது. லஞ்சப்பணத்துடன் போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மாத்திரையை விழுங்குவது போல் ரூ.
10 ஆயிரம் பணக்கட்டை வாயில் திணித்து விழுங்க முயன்றார். ஆனால் போலீசார் லாவகமாக வாயில் கையை போட்டு வெளியே இழுத்து எடுத்தனர். ரத்தக்கறையுடன் பணம் கைப்பபற்றப்பட்டதும் போலீசார் மின் வாரிய அதிகாரியையும் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் இது போன்று இது வரை நடந்திராத சம்பவம் என்பதால் லஞ்சம் பெறும் அதிகாரிகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்துள்ளனர். சமீபத்தில் மருத்துவ தரத்தை கூறு போட்டு விற்ற மருத்துவ கவுன்சிலர் கேதன் தேசாய் தற்போது உள்ளே. வீட்டிற்குள் ரூ. 300 கோடி வரை கட்டு, கட்டாக பணம் இருந்தது. பணத்திலே உருண்டு பிரண்டிருக்கிறார். இவருக்கெல்லாம் மேலாக பணத்தை வாயில போட்டு சவைத்துள்ளார் தமிழக மின்வாரிய அதிகாரி.
ரூ. 35 ஆயிரம் லஞ்சம் கேட்டார்: தூத்துக்குடியில் 10,000 ரூபாய் லஞ்சப்பணத்துடன் மின்வாரிய அதிகாரி கைது செய்யப் பட்ட சம்பவ விவரம் வருமாறு : நெல்லை, தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் சிவபாரதி (28). டிராவல்ஸ் வைத்துள்ளார். இவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே ‘உலர் மின் சலவையகம்’ கட்டியுள்ளார். அதற்கு மின் இணைப்பு பெற, ஏப்., 30 ல், மின்வாரிய அலுவலக, இளநிலை பொறியாளர் திருப்பதியிடம் (44) விண்ணப்பித்தார். அதற்கான அறிக்கை தயாரித்து, சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, திருப்பதி 35,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதுகுறித்து சிவபாரதி, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.நேற்று ( திங்கட்கிழமை ) மாலை, தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் வைத்து சிவபாரதி, திருப்பதியிடம் 10,000 ரூபாயை முதற்கட்ட லஞ்சமாக கொடுத்தார். அதை வாங்கிய திருப்பதியை, டி.எஸ்.பி.,தங்கசாமி தலைமையில் அங்கு மறைந்துஇருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர்.
அவர்களைக் கண்டதும், செய்வதறியாமல் 20 எண்ணிக்கை கொண்ட 500 ரூபாய் நோட்டு கட்டை அப்படியே வாய்க்குள் திணித்து, திருப்பதி விழுங்க முன்றார். சுதாரித்து கொண்ட ஏட்டு ஒருவர், அவரது வாய்க்குள் விரலை விட்டு, லஞ்சப்பணத்தை வெளியே இழுத்து எடுத்தார். அதனால், திருப்பதி வாய்க்குள் காயம் ஏற்பட்டதோடு , லஞ்சப்பணத்தில் ரத்தக்கறை படிந்தது. ரத்தக்கறையுடன் பணத்தை போலீஸ் அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
அவரை கைது செய்து, அவர் பணிபுரிந்த அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். எவ்வளவு பணம் இருந்து என்ன செய்வது பணத்தை சாப்பிடவா முடியும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்
Leave a Reply