கோல்கட்டா:ஜப்பான் உயிரியியல் பூங்காவில் உள்ள, இரண்டு இந்திய யானைகள் மொபைல்போனில் பாகன்கள் கட்டளை படி நடந்துகொள்ளும் அதிசய சம்பவம் நடந்து வருகிறது.
மேற்குவங்க சரணாலயத்தில் பிறந்த தேவி,ராகுல் என்ற இரண்டு யானைகள் ஜப்பானில் உள்ள ஒகினவா உயிரியியல் பூங்காவிற்கு கடந்த 2007ம் ஆண்டு பரிசாக வழங்கப் பட்டன.
தேவி,ராகுல் யானைகள் மேற்கு வங்க மாநிலம் ஹலாங் அருகே உள்ள ஜல்தபாரா என்ற இடத்தில் பிறந்தன.தற்போது தேவிக்கு ஒன்பது வயதும்,ராகுலுக்கு ஏழு வயதும் ஆகிறது.இந்தியாவில் இருந்தபோது தேவியை தீனபந்து பர்மன் என்ற பாகனும்,ராகுலை பகதூர் பிஸ்வகர்மா என்ற பாகனும் பராமரித்து வந்தனர்.
ஜப்பான் உயிரியியல் பூங்காவிற்கு, இரண்டு யானைகள் பரிசாக அனுப்பப்பட்டபோது, இரண்டு பாகன்களும் உடன் சென்று சிறிது நாட்கள் தங்கியிருந்து யானைகளை பழக்கிய பின் நாடு திரும்பினர்.இதற்கு பின் ஒகினவா பூங்கா ஊழியர்களுக்குபிரச்னை உருவானது. பூங்கா ஊழியர்களின் கட்டளைகளுக்கு தேவி,ராகுல் யானைகள் கட்டுப்படவில்லை. உணவு உண்ணவில்லை.சோகமே உருவாக மாறின.
பிரச்னை குறித்து ஆராய்ந்த பூங்கா ஊழியர்களுக்கு, ஜப்பான் மொழியில் அவர்கள் இடும் கட்டளைகள் யானைகளுக்கு புரியாமல் அவ்வாறு நடந்து கொள்வதை கண்டறிந்தனர். செய்வதறியாது தவித்த அவர்களுக்கு யோசனை ஒன்று தோன்றியது.மேற்கு வங்கத்தில் உள்ள பாகன்களிடம் நிலைமையை எடுத்து கூறினர்.யானைகளுடன் மொபைல் போனில் பேசுமாறு பாகன்களிடம் கூறினர்.பாகன்கள் பேசுவதையும்,கட்டளைகளையும் மொபைல்போனில் லவுடு ஸ்பீக்கர் மூலம் யானைகளுக்கு கேட்க செய்தனர்.
என்ன ஆச்சரியம். யானைகள் இரண்டும் குதூகலமாகின.கட்டளைகளுக்கு ஏற்ப நடந்து கொண்டன.இதையடுத்து பாகன்கள் தீனபந்து,பிஸ்வகர்மாவின் உரையாடல்களை டேப் மூலம் பதிவு செய்து,அதனை ஒலிபெருக்கி மூலம் போட்டு கேட்க செய்து யானைகளை பராமரித்து வருகின்றனர் ஒகினவா உயிரியியல் பூங்கா ஊழியர்கள்.யானைகள் மிகுந்த ஞாபக சக்தி கொண்டது.
சிறு வயதிலிருந்து யானைகளை பராமரித்து வந்த தீனபந்து,பிஸ்வகர்மா இருவரும் வங்க மொழியில் பேசி,கட்டளைகளை இட்டு பழகி வந்ததால்,ஜப்பானிய பாகன்களின் கட்டளைகளை அவை ஏற்கவில்லை என, பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply