பூமிக்கடியில் இருந்து சாம்பல், மண் துகள்களுடன் வெப்ப வாயு வெளியேறியது. பூகம்பம் ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் சித்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சித்தூர் கங்கணப்பள்ளி பகுதியில் நீவா நதிக்கரையோரம் மலையடிவாரம் உள்ளது. இங்கு பூமிக்கடியில் இருந்து நேற்று திடீரென சாம்பல், மண் துகள்கள் வெளியே வந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் அருகே சென்று பார்த்தனர். அது வெப்ப வாயு என தெரிந்தது. அந்த இடத்தில் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த இடத்தில் மூங்கில் குச்சியால் பொதுமக்கள் கிளறினர். அப்போது பயங்கர சத்தத்துடன் மீண்டும் புகை கிளம்பியது. இதைக்கண்ட பொதுமக்கள் பூகம்பம் ஏற்படுமோ என பீதியடைந்து அலறியடித்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து சித்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, அந்த இடத்தில் தண்ணீரை பீய்ச்சி அடைத்தனர். ஆனாலும் அந்த வெப்ப வாயு நிற்கவில்லை.
பின்னர் தீயணைப்பு படையினர் சித்தூர் முதலாவது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டு, கலெக்டருக்கு தெரிவித்தனர். உடனே கலெக்டர் சேஷாத்ரி அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதன்படி சித்தூர் கோட்டாட்சியர் சுப்பிரமணியேஸ்வர ரெட்டி, மாவட்ட விநியோக அலுவலர் சந்திரமவுளி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பின்னர் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியரும், நில ஆராய்ச்சியாளருமான ஹனுமந்தா வரவழைக்கப்பட்டார். அவர் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு பரிசோதனை செய்தார். இந்த இடங்களில் சில ரசாயன தொழிற்சாலைகள் இருப்பதால் நிலத்திலிருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமிக்கடியிலிருந்து காற்று வெளிவருகிறது. இதனால் பீதி அடைய தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் சித்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply