சென்னை: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் எம்பிக்கள் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் நடக்கும் இக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 45 எம்பிக்கள் பங்கேற்கின்றனர். இக் கூட்டத்துக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தலைமை வகிக்கிறார். இதில் எண்ணெய் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக நேற்று தமிழக முதல்வர் [^] கருணாநிதி [^]யை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், முரளி தியோரா சந்தித்தார்.
தமிழகத்தில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்துக்காக, இந்த ஆண்டு கூடுதலாக 6 லட்சம் கேஸ் இணைப்புகள் வழங்கும் அனுமதி கடிதத்தை முதல்வரிடம் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்காக, முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டில் 6 லட்சம் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும். அதற்கான அனுமதி கடிதத்தை முதல்வரிடம் வழங்கியுள்ளேன்.
தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும். ஆந்திர மாநிலம் காகிநாடாவில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு எரிவாயு கொண்டு வரும் திட்டம் விரைந்து முடிக்கப்படும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக சென்னையில் உள்ள ஆலையை காலையில் பார்வையிட்டேன்.
முதல்வர் கருணாநிதியை சந்தித்தபோது, எமது துறையின் கீழ் இயங்கும், சென்னையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சி.பி.சி.எல்) விரிவாக்கப் பணிகளுக்கு இடம் அளிக்கும்படி கோரிக்கை வைத்தேன். அவர் அதை கனிவுடன் கேட்டுக் கொண்டார்.
அதுபோல், எண்ணூரில் இயற்கை எரிவாயு கழகம் அமைக்கும் திட்டத்துக்காகவும் இடம் கேட்டோம். அதைப் பற்றியும் ஆலோசனை செய்வதாகவும், அதை கவனத்தில் கொண்டு ஆய்வு செய்வதாகவும் முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்…,” என்றார்.
இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் ஆ. ராசா, தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர் எஸ்.சுந்தரேசன், தமிழக உணவுத்துறை செயலாளர் ஸ்வரன் சிங், உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் கே.ராஜாராமன், சி.பி.சி.எல். நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் [^] பாலசந்திரன் மற்றும் தமிழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Leave a Reply