புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ஆறு ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்த பின் வெளியாகும்.
இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை மீதான விலை நிர்ணயத்தை பெட்ரோலிய கம்பெனிகள் முடிவெடுக்கும் நிலை உருவாகும்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும், மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, அவற்றின் இழப்பை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன. இதனால், மானிய விலையில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.பெட்ரோல், டீசல் விலையை தற்போது மத்திய அரசே நிர்ணயம் செய்கிறது. இதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. அதை ஈடுகட்ட வேண்டியிருக்கிறது அரசு.இதற்கு தீர்வு காணும் வகையில், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றபடி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்ய விரைவில் அதிகாரம் அளிக்கப்பட உள்ளது.நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்ததும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார விவகாரங்களை கவனித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழு கூடி, இதுகுறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளது.
இதற்கு பின், பெட்ரோல் விலை நிர்ணயம் குறித்தும், விலை உயர்வு குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இம்முடிவை இக்குழு எடுத்தால், அது மத்திய அமைச்சரவை அனுமதியைப் பெறத் தேவையில்லை.மம்தா போன்ற சிலர் விலை உயர்வை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் ஏற்கப்படும். அரசு இம்முடிவை எடுக்க விரும்பக் காரணம் நடப்பு நிதியாண்டில் எண்ணெய்க் கம்பெனிகள் 90 ஆயிரத்து 150 கோடி ரூபாயை இழக்கும் என்பதாகும்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களும் தற்போது நாள் ஒன்றுக்கு 272 கோடி ரூபாய் இழப்பைச் சந்திப்பதாக அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள விலை நிர்ணயத்தை மாற்றும் பட்சத்தில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ஆறு ரூபாய் உயர்த்தப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Leave a Reply