மதுரை:பெரியாறுஅணை நீர் பகிர்மானம் குறித்த அரசின் புதிய உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மேலூர் பெரியாறு நீர் பாசன திட்ட கமிட்டி தலைவர் மீனாட்சிசுந்தரம், கம்பம் பள்ளத்தாக்கு நீர் பங்கீட்டு கமிட்டி தலைவர் தர்வேஷ் மூகைதீன் தாக்கல் செய்த மனு:பெரியாறு அணை நீர் பாசன திட்டம் 1898ல் முடிக்கப்பட்டு கம்பம் பள்ளத்தாக்கில் 13 ஆயிரம் ஏக்கர், பெரியாறு வடகரை, தென்கரை கால்வாய்கள் மூலம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்கான தண்ணீர் பெரியாறு அணையில் இருந்து பெறப்படுகிறது.
தற்போதைய முறைப்படி பெரியாறு அணை மற்றும் நீர்மின் நிலையம், மலை கால்வாய்கள், சுருளியாறு, வைரவனாறு கால்வாய்களில் இருந்து பெறப்படும் நீர் பெரியாறு தொகுப்பாக எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீர் வைகை அணையில் பின் சேர்க்கப்படுகிறது. இரண்டு லட்சத்து 8 ஆயிரத்து 141 ஏக்கர் நிலங்கள் பெரியாறு அணை நீர் பாசனத்தில் பயனடைகின்றன. இதில் 19 ஆயிரத்து 853 ஏக்கர் நிலங்கள் கம்பம் பள்ளதாக்கு பெரியாறு ஆற்று படுகை வட்டத்தில் வருகிறது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பழைய வைகை அணை திட்டத்தில் வருகிறது. பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு விடப்படும் தண்ணீர் வைரவனாறு, சுருளியாறு மற்றும் மழை நீர் பழனிசெட்டிபட்டியில் அளக்கப்படுகிறது. நீர் வரத்துக்கு தகுந்தவாறு பிரித்து கொடுக்கப்படுகிறது.
கொட்டகுடி ஆறு, வரட்டாறு பழைய வைகை ஆயக்கட்டில் சேருகிறது.வைகை அணை மொத்த கொள்ளளவு 6,800 மில்லியன் கன அடி. இதில் நாலாயிரம் மில்லியன் கனஅடி பெரியாறு தொகுப்பில் இருந்து பெறப்படுகிறது.ஏப்ரல் 21ம் தேதி பெரியாறு நீர் பகிர்மானத்தை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரியாறு அணையில் இருந்து பெறப்படும் நீர் மட்டுமே பெரியாறு தொகுப்பாக எடுக்கப்படும். வைகை அணையில் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பு பெரியாறு தொகுப்பில் கழிக்கப்படும். இதனால் மதுரை,திண்டுக்கல், தேனி, சிவகங்கையை சேர்ந்த பெரியாறு பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவர். அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.
தலைமை நீதிபதி(பொறுப்பு) எலீப்தர்மாராவ், நீதிபதி கே.பி.கே.வாசுகி கொண்ட பெஞ்ச், மனு குறித்து பதிலளிக்க பொதுப்பணி செயலாளர், வருவாய் நிர்வாக கமிஷனர், நீர் ஆதார மேம்பாடு தலைமை பொறியாளர், மதுரை மற்றும் தேனி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது.
Leave a Reply