ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,மட்டும் போட்டி : சென்னை :நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
கூட்டணி கட்சித் தலைவர்களை சமரசம் செய்து, இரண்டு, “சீட்’களிலும் கூட்டணி சார்பில் அ.தி.மு.க.,வே போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க., சார்பில் ஒரு எம்.பி., சீட் உறுதியாகியுள்ளது. இன்னொரு எம்.பி., சீட் கிடைக்க கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., – மார்க்சிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தேவை.அ.தி.மு.க., சார்பில் ஒரு எம்.பி., சீட் எடுத்துக் கொண்டாலும், மற்றொரு எம்.பி., சீட்டை கூட்டணிக் கட்சிகளுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஒதுக்குவார் என கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்தன.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வைகோ, தா.பாண்டியன் தோல்வி அடைந்ததால் அவர்கள் இருவரில் ஒருவருக்கு எம்.பி., சீட் கிடைக்கும் என, அக்கட்சியினர் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாததாலும், ஒரு கட்சி தலைவருக்கு சீட் கொடுப்பதை மற்றொரு கட்சித் தலைவர் விரும்பாததாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்க முடியாத குழப்பம் அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் டில்லி மேலிட தலைவர்களிடம் ஜெயலலிதா சமரச பேச்சு நடத்தினார். அ.தி.மு.க., சார்பில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், அ.தி.மு.க.,வுக்கு தங்களது கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க சம்மதம் தெரிவித்தனர்.பின், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், ம.தி.மு.க.,விடமும் ஆதரவு கேட்டு ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கும் ஆதரவு அளிப்பதாக கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதத்தை ஜெயலலிதாவிடம் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில், வைகோ, மார்க்சிஸ்ட் சார்பில் ராமகிருஷ்ணன், சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரன், கோபு ஆகியோர் அவரை நேற்று சந்தித்து பேசினர்.ஜெயலலிதாவிடம் தங்கள் கட்சிகளின் ஆதரவை தெரிவித்தனர். அதற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஜெயலலிதா சமரச பேச்சு நடத்தியதால் ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க., இரண்டு இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply