மலேசியாவில் தவிக்கும் ஈழத் தமிழர்கள்- பினாங்கு துணை முதல்வர் ஆறுதல்

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்: இலங்கையிலிருந்து தப்பி மலேசிய கடலில் கப்பலில் சென்றபோது கைது செய்யப்பட்ட 75 இலங்கைத் தமிழர்கள் கைதியை விட மோசமாக நடத்தப்படுவதாக செய்திகள் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.

எங்களைக் கைதியாக நடத்தாதீர்கள்; அகதிகளாக நடத்துங்கள் என்று மலேஷிய பிரதமருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் வேண்டியுள்ளனர்.

இவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, விரைவில் பிரச்சினை தீரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வட பகுதியிலுள்ள முகாம்களிலிருந்து 6 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 75 பேர் கடந்த 19 ஆம் தேதி சிறிய கப்பல் மூலம் அடைக்கலம் கொடுக்கும் நாட்டைத் தேடிப் புறப்பட்டனர். அந்தக் கப்பல் மலேசிய கடலில் சென்றபோது மலேசிய போலீசால் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்ட நிலையில் முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என தனித்தனியாக முகாம்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அங்குள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள முகாமொன்றில் ஆண்களையும், மற்றுமொரு முகாமில் பெண்களையும், வேறு முகாமில் குழந்தைகளையும் தனித் தனியாகப் பிரித்து அடைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மிகச் சிறிய அறையில் கைவிலங்குடன் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தனி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளை ஒப்படைக்குமாறு உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “எங்களுக்கு சுகாதாரமற்ற அறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இவை வதை முகாம்கள் போலவே உள்ளன. எங்களை அகதிகளைப் போன்று நடத்தாமல் கைதிகளைப் போன்றே நடத்துகின்றனர். எங்கள் குழந்தைகளின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை.

தமிழக தல்வர் கருணாநிதியாவது எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களை மீட்கவேண்டும். எங்களுக்கு ஆதரவளித்து தமிழகத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டும். எங்கள் குழந்தைகளை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறி 6 இலங்கைப் பெண்களும் உண்ணாவிரதம் [^] இருந்தனர். அதற்கும் பலனில்லை.

தங்களை அகதிகளாக ஏற்கும் ஏதேனும் ஒரு நாட்டுக்கு அனுப்பிவிடுமாறு இந்த தமிழர்கள் விடுத்த கோரிக்கையையும் மலேசியா நிராகரித்து விட்டதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

பினாங்கு துணை முதல்வர் ஆறுதல்

இந்நிலையில், அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி,

“உங்களுக்கு எந்த கொடுமையும் நேராது. இப்போது இருக்கும் முகாமில் வசதிகள் குறைவாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். மிக விரைவிலேயே உங்களை நீங்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.

அதற்காக உள்துறை அமைச்சகத்திற்கும், ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகளிடமும் பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் கருணாநிதியுடனும் இது தொடர்பாக பேச முடிவு செய்துள்ளோம். விரைவிலேயே நல்ல தீர்வு கிடைக்கும். அதனால் கவலைப்படாமல் இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *