ராஞ்சி:ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் நேற்றிரவு தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, கவர்னர் எம்.ஓ.எச்.பரூக்கிடம் கொடுத்தார்.
இதனால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஜார்க்கண்டில் முதல்வர் சிபு சோரன் தலைமையிலான கூட்டணி அரசு பதவியில் இருந்தது. இந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., சமீபத்தில் வாபஸ் பெற்றது.
இதையடுத்து, பா.ஜ., தலைமையில் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆதரவுடன் புதிய அரசு அமையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பா.ஜ., தலைமையிலான அரசுக்கு முதலில் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த சோரன், பின், தன் முடிவை மாற்றிக் கொண்டார். காங்கிரஸ் ஆதரவுடன் தனது ஆட்சியை தக்க வைக்க முற்பட்டார். அது நடக்கவில்லை.
இதற்கிடையில், பா.ஜ., தன் ஆதரவை வாபஸ் பெற்றதால், பெரும்பான்மை இழந்த சிபு சோரன், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் உத்தரவிட்டார். ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது. சிபு சோரன் ஆதரவளிக்க மறுத்ததால், எரிச்சல் அடைந்த பாரதிய ஜனதா கட்சி, தங்களது கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு நேற்று கொறடா உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், சிபு சோரன் கொண்டு வரும் நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்திற்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் சட்டசபையில் பா.ஜ.,வுக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதல்வர் சிபுசோரன் நேற்றிரவு தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, மாநில கவர்னர் எம்.ஓ.எச். பரூக்கிடம் அளித்தார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை சிபுசோரனை, இடைக்கால முதல்வராக நீடிக்கும்படி கவர்னர் கேட்டுக் கொண்டார். இத்தகவலை, சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் கூறினார்.
ஹேமந்த் மேலும் கூறுகையில், “”மாநிலத்தின் நலன் கருதியும், ஜனாதிபதி ஆட்சி அமலாவதை தடுக்கவும், சிபுசோரன் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொண்டோம். யாரும் ஆதரவு அளிக்க முன்வரவில்லை. அதனால், சிபுசோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்,” என்றார்.அதேநேரத்தில், ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைக்க, அந்தக் கட்சியின் தலைவர் சோனியா சம்மதம் தெரிவித்து விட்டதால், அதற்கான முயற்சியில் அந்தக் கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், புதிய அரசு அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
Leave a Reply