சென்னை : ”பதினைந்து நாட்கள் விடுப்பு எடுத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளியூர்களுக்கு சென்று வாருங்கள். உடல் ஆரோக்கியத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்,” என, போலீசாருக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிவுரை வழங்கினார்.
சென்னை மாநகர போலீஸ் மற்றும் தமிழ்நாடு சிறுநீரக ஆய்வு நிறுவனம் (டாங்கர் பவுண்டேஷன்) சார்பில், போலீசாருக்கு சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை கமிஷனர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, ‘போஸ்டரை’ கமிஷனர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:பள்ளி படிப்பின் போது, ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று அனைவருக்கும் கற்பிப்பார்கள். அதை, நாம் எப்போதும் நினைப்பதில்லை. குறிப்பிட்ட வயதில் அதாவது 40 வயதில் உடலில் பிரச்னைகள் ஏற்படும் போது தான் நினைத்துப் பார்க்கிறோம்.எனக்கு 32வது வயதில் ரத்த அழுத்த பிரச்னை ஏற்பட்டது. அன்று என்ன வீரியத்தில் மருந்து சாப்பிட்டேனோ, அதே மருந்தைத் தான் நான் இப்போதும் சாப்பிட்டு வருகிறேன். போலீசார் அதிக நேரம் பணியில் இருக்கின்றனர். ஆனால், தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க மறந்து விடுகின்றனர்.போலீசாரில் 10 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு உடல் உபாதை உள்ளது. நான் போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி.,யாக இருந்த போது கிராமப்புறங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.ஐ.,க்களாக பணியாற்றும் 45 பேர் பயிற்சிக்காக வந்திருந்தனர்.
பயிற்சியின் இடையில் நான் அவர்களை சந்தித்த போது அதிர்ச்சியடைந்தேன். அவர்களில் 70 சதவீதம் பேர் இதயம், சிறுநீரகம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, மிகவும் மோசமான உடல் நிலையுடன் இருந்தனர்.அப்போது நான், டாங்கர் பவுண்டேஷனைச் சேர்ந்தவர்களை அழைத்து, உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்ச்சி முகாமை நடத்தினேன். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பாதிப்பு எப்போது வரும் என்பது தெரியாது. சீரான இடைவெளியில் உடல் நிலையை நாம் சோதிக்க வேண்டும்.சமீபகாலமாக உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தாலும், வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதில் யாரும் அக்கறை காட்டுவதில்லை. தினமும் ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறை 10 முதல் 15 நாட்கள் வரையில் விடுப்பு எடுத்துக் கொண்டு குடும்பத்துடன், சந்தோஷமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டும்.போக்குவரத்து போலீசாரை பொறுத்தவரையில் பொதுமக்களிடம் உடலுறுப்பு தானம் செய்வது குறித்து, அதிகாரமாக இல்லாமல் கனிவாக எடுத்துக் கூற வேண்டும்.இவ்வாறு ராஜேந்திரன் பேசினார்.
நிகழ்ச்சியில், சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர், வடக்கு மண்டல இணை கமிஷனர் சேஷசாயி, டாங்கர் பவுண்டேஷன் நிறுவன தலைவர் ஜார்ஜி ஆப்ரகாம், ஆலோசனை குழு உறுப்பினர் ராஜலட்சுமி ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அனாதை கார்கள் கண்காணிப்பு: கருத்தரங்க முடிவில், பத்திரிகையாளர்களிடம் கமிஷனர் ராஜேந்திரன் பேசும்போது, ”சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போலீசாருக்கு, சிகிச்சை அளிப்பதில் தனி கவனம் செலுத்தப்படும். காலாவதி உணவுப் பொருட்கள் குறித்த புகாரை அடுத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.”இந்த விவகாரத்தில் மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்கு தனியான பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அனாதையாக நிற்கும் கார்கள் கண்காணிக்கப்படும்,” என்றார்.
Leave a Reply