ஐதராபாத்: “”2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மோசடி நடந்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து, எவ்விதமான விசாரணை நடத்தப்பட்டாலும், அதை எதிர்கொள்ளத் தயார்,” என, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
பிரதமரின் பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜா கூறியதாவது: ஊழல் யார் செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. எந்த விதமான விசாரணையையும் சந்திக்க நான் தயார். ஆனால், அந்த விசாரணை பிரச்னையின் ஆழத்தையும் ஆராய வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் அனைத்தும் தே.ஜ., கூட்டணி அரசு உருவாக்கிய விதிமுறைகளின்படியே நடந்தன. அந்த விதிமுறைகளையும், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைகளையும் நாங்கள் கண்டிப்பான வகையில் பின்பற்றினோம்.
தொலை தொடர்புத் துறையில், சிலர் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டு வந்தனர். அதை நான் உடைத்ததால், என் மீது பாய்கின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைகளை தற்போது மத்திய நிதி அமைச்சரும், பிரதமர் அலுவலகமும் ஆய்வு செய்து வருகின்றன. 2ஜி மற்றும் 3ஜி ஏலங்களை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. 2ஜி என்பது பொது வினியோகத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பது பாசுமதி அரிசி போன்றது. இவ்வாறு ராஜா கூறினார்.
Leave a Reply