மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஆஜராகி, அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததன் மூலம், நாட்டு மக்களிடையே பிரபலமானவர் தான், உஜ்வால் நிகாம்.
1994 மும்பை குண்டு வெடிப்பு, குல்சன் குமார் கொலை, பிரமோத் மகாஜன் கொலை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கு இவர் தான், அரசு தரப்பு வக்கீலாக ஆஜரானார்.தற்போது நிகாமுக்கு 57 வயதாகிறது. இதுவரை தான் ஆஜரான வழக்குகளில் 600 பேருக்கு ஆயுள் தண்டனையும், 30 பேருக்கு தூக்கு தண்டனையும் பெற்றுத் தந்துள்ளார்.உலகிலேயே மிக நீண்ட காலம் விசாரணை நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கிலும் இவர் தான், அரசு தரப்பு வக்கீல். இந்த வழக்கில் ஆஜராவதற்காக முதல் நாள் இவர் கோர்ட்டுக்கு வந்தபோது, நூறுக்கும் மேற்பட்ட, “டிவி’ மற்றும் பத்திரிகை செய்தியாளர்கள் இவரை பேட்டி காண்பதற்காக கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
மும்பையில் இருந்து 430 கி.மீ., தூரத்தில் உள்ள ஜலோகான் என்ற இடத்தில் தான் இவரது வீடு உள்ளது. மும்பையில் வீடு வாங்குமளவுக்கு அவருக்கு வசதி இல்லை. இதனால், மும்பை ஓட்டல் அறையில் தங்கியிருந்த அவர், வார இறுதியில் மட்டும் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.உஜ்வால் நிகாமின் தந்தை பிரிட்டனில் பாரீஸ்டர் பட்டம் பெற்றவர். இதனால், தன் மகன் வக்கீலாக வேண்டும் என, அவர் விரும்பினார். ஆனால், உஜ்வால் நிகாமின் விருப்பமோ வேறு மாதிரியாக இருந்தது. அவர் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற விரும்பினார்.பின், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சட்டம் படித்தார். அரசியலில் சேர்ந்து மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பது உஜ்வால் நிகாமின் விருப்பம்.
ஆனால், அவரது தாயார் இதை கடுமையாக எதிர்க்கிறார்.”நாகரிகமானவர்களுக்கு அரசியல் சரியாக வராது’ என்பது அவரது தாயாரின் கருத்து. மகாராஷ்டிராவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுடன் நெருக்கமான நட்பு இருந்தாலும், தங்கள் கட்சியில் சேரும்படி யாரும் இதுவரை தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என, நிகாம் தரப்பில் கூறப்படுகிறது.எளிமையாக வலம் வந்து கொண்டிருந்த நிகாம், பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் ஆஜரானதால் தற்போது பெரும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குண்டு துளைக்காத வாகனத்தில், பாதுகாப்பு படையினருடன் தான் வெளியில் அவர் செல்ல வேண்டியுள்ளது.தினமும் அதிகாலை 4 மணிக்கு கண் விழிக்கும் நிகாம், இரவு 10 மணி வரை தொடர்ந்து பணியாற்றுகிறார். இரவு விருந்துகளில் இவர் பங்கேற்பதில்லை.
Leave a Reply