சென்னை: அடிப்படை வசதிகளே இல்லை என, நோட்டீஸ் அனுப்பப்பட்ட கல்லூரிகள் சிலவற்றில், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடத்தப்படுபவை என தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், 150க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு இணைப்பு வழங்குவது தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக் கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், ஆசிரியர் எண் ணிக்கை, நூலகம், ஆய்வுக்கூடம், வகுப்பறை உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆசிரியர் எண்ணிக்கையில், 35 சதவீதத்திற்கு மேல் குறைபாடு, நூலகம் மற்றும் ஆய்வுக்கூடத்தில் தலா 50 சதவீதத்திற்கு மேல் குறைபாடு, வகுப்பறையில் 20 சதவீதத்திற்கும் மேல் குறைபாடு உள்ள கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை.
இந்த ஆய்வின்படி, 66 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும், 180 பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர், ஆய்வுக்கூடம், நூலகம் ஆகிய பிரிவுகளில் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதில் 140 இளநிலை பொறியியல், 14 முதுநிலை பொறியியல், 9 எம்.சி.ஏ., 15 எம்.பி.ஏ., 2 எம்.எஸ்சி., படிப்புகள் அடங்கும்.
‘போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான இணைப்பை ஏன் ரத்து செய்யக்கூடாது’ என விளக்கம் கேட்டு சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 66 கல்லூரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 14ம் தேதிக்குள் இந்த நோட்டீசிற்கு விளக்கம் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் இரண்டாவது ஆய்வு நடத்தப்படும். அப்போதும் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தால், பாடப்பிரிவுக்கு வழங்கப்பட்ட இணைப்பை ரத்து செய்ய சென்னை அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட கல்லூரிகள் பட்டியலில், பிரபலங்கள் நடத்தும் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் முன்னணிக் கல்விக் குழுமங்கள் நடத்தும் ஓரிரு கல்லூரிகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள இளநிலை பொறியியல் படிப்புகளில், 30 முதல் 120 இடங்கள் வரை உள்ளன. அடிப்படை வசதிகள் இல்லை என்ற காரணத்திற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்ட 18 பாடப்பிரிவுகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடத்தப்படுபவை; 35 பாடப்பிரிவுகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் நடத்தப்படுபவை. இரண்டு பாடப்பிரிவுகள் 1985ம் ஆண்டு முதல் நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படும் கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகளில் குறைபாடு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பெரும்பாலான கல்லூரிகளில் ஆசிரியர் எண்ணிக்கையிலேயே பற்றாக்குறை நிலவுகிறது. கல்லூரிகளில் இரண்டாவது ஆய்வு நடத்தி, இம்மாத இறுதியில் இப்பிரச்னை தொடர்பாக இறுதி முடிவை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே, எந்தெந்த கல்லூரி, பாடப்பிரிவுகளுக்கு இணைப்பு ரத்து செய்யப்படுகிறது என்ற விவரம் தெரியவரும்.
இரண்டாவது ஆய்வில் எத்தனை கல்லூரிகள் குறைபாட்டை சரி செய்து கவுன்சிலிங்கில் இடம்பெறும் என்பதும், எத்தனை கல்லூரிகள் பொறியியல் கவுன்சிலிங்கிலிருந்து நீக்கப்படும் என்பதும் அப்போது தெரியவரும். அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் நிர்ணயித்த, ஆசிரியர், ஆய்வுக்கூடம், நூலகம் உள்ளிட்ட வசதிகளை விட குறைந்த அளவையே பாடப்பிரிவிற்கு இணைப்பு வழங்குவதற்காக சென்னை அண்ணா பல்கலைக் கழகம் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளை முழுமையாக பின்பற்றியிருந்தால், மேலும் பல கல்லூரிகள் சிக்கலில் மாட்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply