பொள்ளாச்சி: போதிய வேலை வாய்ப்பின்மை உட்பட பல்வேறு காரணங்களால், ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்-1, அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-1, அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-2 மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்- 40 உட்பட மொத்தம் 44 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.
ஒவ்வொரு பயிற்சி நிறுவனத்திலும் குறைந்தபட்சம் 40 மாணவர்களும், அதிகபட்சமாக 100 மாணவர்களும் சேர்த்து மொத்தம் 2000க்கும் மேற்பட்ட மாணர்வகள் சேர்க்க முடியும். இருப்பினும், பல்வேறு காரணங்களால் சில ஆண்டுகளாக ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
நடப்பாண்டில் திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பட்டய படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறுவது ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைந்தது. கல்வி நிறுவனங்களில் மாணவர் சேருவதற்கான இடங்கள் அதிகமுள்ள நிலையிலும், பட்டய படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கல்வியாளர்கள் கூறியதாவது: முன்பு ஆசிரியர் பட்டய படிப்புக்கு பலரும் ஆர்வமுடன் விண்ணப்பிப்பர். போட்டி காரணமாக இடம் கிடைக்காமல் ஏமாற்றமுடன் வேறு ஏதாவது படிப்பை தொடருவர். தற்போதோ நிலைமை தலைகீழாக உள்ளது. அரசு பள்ளிகளில் பல ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. அதனால், ஆசிரியர் பணியிடமும் குறைகிறது. எனவே, எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்ற அச்சத்தில் பலரும் ஆசிரியர் பட்டய கல்வி படிக்க முன்வராமல் உள்ளனர்.
தற்போதுள்ள பாடத்திட்டமும் மிகவும் கடினமாக உள்ளது. கடந்த 2008ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பாடத் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடினமாக உள்ளதால், மாணவர்கள் எளிதாக படிக்க முடியாமல் திணறுகின்றனர். கடந்தாண்டில் கூட ஆங்கிலம், கணக்குப்பாடங்களில் பலரும் தேர்ச்சி அடையாமல் உள்ளனர்.
இதுதவிர, வேலை வாய்ப்பும் குறைவாகவே உள்ளது. ஆசிரியர் பட்டயப்படிப்பை முடித்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பலரும் சான்றிதழை பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். குறைந்தபட்சமாக 10 ஆண்டுகளுக்கு மேலானாலும் வேலை கிடைப்பதில்லை. இதுபோன்ற காரணங்களால் மாணவர்கள் ஆசிரியர் பட்டய படிப்பை தேர்ந்தெடுக்கவே பயப்படுகின்றனர். இவ்வாறு, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினரிடம் கேட்டபோது, ‘கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 862 மட்டுமே வந்தன. இங்கு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆசிரியர் பட்டய படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. பிரச்னையை கண்டறிந்து, மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தீவிர முயற்சி எடுக்கப்படும்,’ என்றனர்.
Leave a Reply