ஆஸ்திரேலியாவில் புதிதாக பெண் பிரதமர்

posted in: உலகம் | 0

thumb_25812மெல்போர்ன்:ஆஸ்திரேலிய முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. பிரதமராக கெவின் ருத் தேர்வு செய்யப்பட்டார்.

சமீப காலமாக அவரது செல்வாக்கு குறைந்து வந்தது. இதனால், வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டதால், கட்சிக் கூட்டத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, கெவின் ருத் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, துணைப் பிரதமராக இருந்த ஜூலியா கிலார்டு புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் ஜூலியாவுக்கு கிடைத்துள்ளது.

கண்ணீர் விட்டார்: தொழிலாளர் கட்சியின் 112 எம்.பி.,க்கள் அடங்கிய கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் கெவின் ருத் நீக்கப்பட்டு, ஜூலியா பெயர் புதிய பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதமர் கெவின் ருத், கண்ணீர் விட்டு அழுதார். அவரை சக எம்.பி.,க்கள் சமாதானம் செய்தனர். உலகப் பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்ட தேக்க பாதிப்பை சமாளித்த போதும், தனக்கு இந்த நிலை ஏற்பட்டதே என்று வருத்தப்பட்டார் ருத்.ஆனால், கனிமச் சுரங்க விஷயத்தில் அரசுக்கு வருமானம் வராமல், பெரிய பணக்காரர்கள் வசதியாக வாழ அனுமதித்தது, அவர் கட்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது; மேலும் அவருக்கு எதிர்ப்பும் அதிகரித்தது. அது திடீரென அவரிடம் பணியாற்றிய துணைப் பிரதமர் கிலார்டுக்கு சாதகமாக அமைந்தது.

எதிர்க்கட்சியான லிபரல் கட்சியினர் மக்களிடம் அதிக அளவில் செல்வாக்கு பெறாமல் இருக்க ஆளுங்கட்சி எம்.பி.,க்கள், புதிய பிரதமராக கிலார்டுவைத் தேர்வு செய்தனர் என்றும் கூறப்படுகிறது.ஆஸ்திரேலியா விசா நடைமுறையில் சமீபத்தில் கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த விதிமுறைகளை புதிய பிரதமர் சற்று தளர்த்துவார் என, ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல, இந்திய சிவில் அணுசக்தி செயல் திட்டங்களுக்கும் கிலார்டு எரிசக்தி வழங்க முன்வருவார் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *