இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வரம்புக்குள் கொண்டு வர அரசு பரிசீலனை

posted in: மற்றவை | 0

large_10096புதுடில்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி,சி.சி.ஐ.,), சங்கங்கள் பதிவுச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வந்து அடக்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஐ.பி.எல்., விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து, பல்வேறு அமைப்புகளின் செயலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து அதிகமாக எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: அகில இந்திய அளவிலான நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் சங்கங்களை, மத்திய அரசின் பதிவின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அகில இந்திய அமைப்புகளை, சங்கங்கள் பதிவுச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர முடியும். அவற்றை மிகவும் பொறுப்புடைமை உடையதாக மாற்ற முடியும். இது தொடர்பாக ஆய்வு செய்யவும், விவரங்களைத் தயாரிக்கவும் நிபுணர் குழு ஒன்றை அமைக்கவும் தீர்மானித்துள் ளோம். டுவென்டி டுவென்டி போட்டிகளை நடத்திய ஐ.பி.எல்., அமைப்பின் தந்தையான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அகில இந்திய அளவில் செயல்படும் அமைப்பு என்றாலும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

மத்திய கம்பெனி விவகார அமைச்சகத்தினால் பின்பற்றப்படும் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம். இதை நான் மட்டும் செய்ய முடியாது; மற்ற சிலரும் சேர்ந்து இதில் பங்காற்ற வேண்டும். இது மாதிரிச் சட்டம் என்பதால், அதே சமயம் இதன் மூலம் சங்கங்களை மக்கள் பதிவு செய்ய முடியாது. சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, மத்திய அளவில் பதிவு அமைப்பு ஒன்றை உருவாக்கினால் தான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் போன்ற சங்கங்களையும், அரசு சாரா அமைப்புகளையும், இதர பல அமைப்புகளையும் மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். பெரும்பாலான சங்கங்கள் மாநில சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படுவதால், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் உறவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கு எந்தப் பாதிப்பும் நேரிடக்கூடாது. இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *