லண்டன் : இந்தியாவைச் சேர்ந்த டாக்டர்களுக்கு, குடியேற்ற விதிமுறைகளில் பிரிட்டன் அரசு கெடுபிடி விதித்ததை அடுத்து, அங்கு டாக்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மருத்துவ பணிகளில் கடுமையான தேக்கநிலை நிலவுகிறது. இதனால், இந்திய டாக்டர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்க, பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளைச் சேராத, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த ஏராளமான டாக்டர்கள், பிரிட்டனில் பயிற்சி டாக்டர்களாக பணியாற்றி வந்தனர். இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 2006ல் பிரிட்டன் அரசு குடியேற்ற விதிமுறைகளில் கெடுபிடி காட்டியது.இதன்படி, ஐரோப்பிய நாடுகளைச் சேராத, பிற நாடுகளைச் சேர்ந்த பயிற்சி டாக்டர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பிரிட்டனில் தங்கியிருக்க முடியாது என, அறிவிக்கப் பட்டது. இதனால், ஏராளமான இந்திய டாக்டர்கள், அங்கிருந்து தாய்நாடு திரும்பினர். பிற நாடுகளைச் சேர்ந்த டாக்டர்களும், தங்களின் தாய்நாடுகளுக்கு திரும்பினர்.
இதன்காரணமாக, தற்போது பிரிட்டனில் டாக்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைத் துறை, போதிய டாக்டர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. ஏராளமான நோயாளிகள், சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பிரிட்டனில் தற்போது புதிதாக பொறுப் பேற்றுள்ள கூட்டணி அரசுக்கு, இந்த விஷயம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இதனால், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த பயிற்சி டாக்டர்களுக்கு, விதிக்கப்பட்டுள்ள குடியேற்றத் துறை கெடுபிடிகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்திய டாக்டர்களுக்கான விசா காலத்தை, தற்போதுள்ள இரண்டு ஆண்டுகளில் இருந்து, நான்கு ஆண்டுகள் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
Leave a Reply