ஜெருசலம் : நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது, இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
துருக்கியிலிருந்து காசாவிற்கு, நேற்று முன்தினம் நிவாரணப் பொருட்களுடன் கப்பல் ஒன்று சென்றது. இந்நிலையில், மத்தியதரை கடல் பகுதியில், இஸ்ரேல் ராணுவத்தினர், நிவாரணப் கப்பல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், ஒன்பது பேர் பரிதாபமாக இறந்தனர். இதில், பெரும்பாலானவர்கள் துருக்கியை சேர்ந்தவர்களாவர். இந்த சம்பவத்திற்கு பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஹமாஸ் தலைவர் கலீத் மெஷால் கூறியதாவது: இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் உலக நாடுகள் துண்டித்துக் கொள்ள வேண்டும். காசா கடல் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற, அமெரிக்காவும், ரஷ்யாவும், இஸ்ரேலை வற்புறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் இஸ்ரேலை தனிமை படுத்த வேண்டும். இவ்வாறு கலீத் மெஷால் கூறினார். இதற்கிடையே, பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யாவுக்கு பெருமளவில் நிவாரணப் பொருட்களை வழங்கும், ஐரோப்பிய சமுதாயம், இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. துருக்கி பிரதமர் டேயிப் எர்டோகன் கூறுகையில், “காசா துறைமுகத்திற்கு கப்பல்கள் வந்து செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும். இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது’ என்றார்.
இதற்கிடையே, ஐ.நா., செய்தித் தொடர்பாளர் மேரி ஒகாபே கூறுகையில், “காசாவிற்கு நிவாரணப் பொருட்களுடன் பல கப்பல்கள் வரவுள்ளதால் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். நிவாரணப்பொருட்களை எடுத்து சென்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மேற்கு ஆசியாவில், தற்போது உள்ள பதட்ட நிலைமைகள் ஆராயப்பட்டு வருகின்றன’ என்றார். அதே சமயத்தில், தவறான புலனாய்வு அடிப்படையில் மேற்கொண்ட இத்தாக்குதலுக்கு இஸ்ரேலில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இஸ்ரேல் அமைச்சரவை இந்த விஷயம் குறித்து ஆலோசிக்க முடிவு செய்திருக்கிறது. மேலும், ராணுவ அமைச்சர் எகுத் பராக் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
Leave a Reply