எகிப்துக்கான தேயிலை ஏற்றுமதியை உயர்த்த இந்திய நிறுவனங்கள் திட்டம்

2911603கோல்ட்டா: நடப்பு ஆண்டில் எகிப்து நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதியை உயர்ந்த இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

எகிப்து ஆண்டுதோறும் சுமார் 8 கோடி கிலோ தேயிலையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் நம் நாட்டின் பங்களிப்பு 1.70 கோடி கிலோவாக உள்ளது. அதே சமயம், கென்யா நாட்டின் பங்களிப்பு 6 கோடி கிலோவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேயிலை ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக கென்யா, சீனா, இந்தோனேஷியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன. நம் நாட்டில் சி.டி.சி. மற்றும் ஆர்தோடக்ஸ் ஆகிய இரண்டு முக்கிய தேயிலை ரகங்களே பிரதானமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. சி.டி.சி. ரக தேயிலையை, நம் நாடு அதிக அளவில் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. உயர்தர ஆர்தோடக்ஸ் தேயிலை ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேயிலை ஏற்றுமதியில் முன்னணி நாடுகளுள் ஒன்றாக உள்ளபோதிலும், நம் நாடு இதர நாடுகளின் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இந்தியா, சி.டி.சி. ரக தேயிலை ஏற்றுமதியில், கென்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆர்தோடக்ஸ் ரக தேயிலை ஏற்றுமதியில் இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் போட்டியை ஏற்படுத்தியுள்ளன. தேநீரின் நன்மைகளை உணர்த்தும் வகையில் தேயிலை வாரியம் உள்நாட்டில் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தேயிலை வாரியத்தின் தலைவர் பாசுதேப் பானர்ஜி கூறினார். தற்போது நம் நாட்டில் ஒரு ஆண்டுக்கு தனிநபர் தேயிலை நுகர்வு 800 கிராம் ஆக உள்ளது. இது, பாகிஸ்தானில் ஒரு கிலோவாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் 20 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டிலும் இதே அளவிற்கு ஏற்றுமதி மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008-09ம் நிதி ஆண்டில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 19 கோடி கிலோவாக இருந்தது. நடப்பு 2010 காலண்டர் ஆண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி 100 கோடி கிலோவை எட்டும் என பானர்ஜி மேலும் தெரிவித்தார். சென்ற ஆண்டில் தேயிலை உற்பத்தி 97.90 கோடி கிலோவாகவும், முந்தைய 2008ம் ஆண்டில் 98.10 கோடி கிலோவாகவும் இருந்தது. சென்ற ஆண்டில் உற்பத்தி 20 லட்சம் கிலோ குறைந்துள்ளது. சென்ற 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி நம் நாட்டில் 1,692 பதிவு பெற்ற தேயிலை உற்பத்தியாளர்கள் உள்ளனர். 2,200 பதிவு பெற்ற ஏற்றுமதி நிறுவனங்களும், 5,848 பதிவு பெற்ற இறக்குமதியாளர்களும் உள்ளனர். ஒன்பது பிரதான தேயிலை ஏல மையங்களும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *