ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளை பின்பற்ற தயார்: ஐகோர்ட்டில் பொறியியல் கல்லூரிகள் தகவல்

posted in: கோர்ட் | 0

thumb_26060சென்னை: ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளை பின்பற்ற பொறியியல் கல்லூரிகள் உட்பட, 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தயாராக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிகளின் பட்டியலும் அளிக்கப்பட்டது.

பொறியியல் கல்லூரிகள் ஆண்டு தோறும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதியை பெற வேண்டும். இவ்வாறு அனுமதி வழங்குவதற்கு இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை ஏ.ஐ.சி.டி.இ., உருவாக்கியது. கல்லூரிகள் பற்றிய முழு விவரங்களையும் ஆன்-லைன் மூலம் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் தனியார் கல்லூரிகள் பல மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட், புதிய விதிமுறைகளை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி தனபாலன் முன் நேற்று துவங்கியது. ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் சீனியர் வக்கீல் தியாகராஜன், வக்கீல் ரவீந்திரநாத் ஆஜராகினர். புதிய விதிமுறைகளை பின்பற்ற 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள் (பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள்) தயாராக உள்ளது எனக் கூறி அதன் பட்டியலை நீதிபதியிடம் சீனியர் வக்கீல் அளித்தார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், கூட்டமைப்பு மற்றும் தனியார் கல்லூரிகள் சார்பில் சீனியர் வக்கீல்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கங்குலி, என்.ஆர்.சந்திரன், முத்துகுமாரசாமி மற்றும் வக்கீல் ஆர்.நடராஜன் ஆஜராகினர். சீனியர் வக்கீல் கங்குலியின் வாதம் இன்று தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *