ஓய்வூதிய பலன்கள் முழுவதையும் நிறுத்தி வைக்க முடியாது: ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

சென்னை: “ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் முழுவதையும் போக்குவரத்துக் கழகம் நிறுத்தி வைக்க முடியாது’ என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் இருகூரைச் சேர்ந்தவர் பால்ராஜ்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் (கோவை பிரிவு) மூத்த உதவியாளராக பணியாற்றி, கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: டிக்கெட் புக் குறைவாக இருந்ததற்கு நான் உட்பட நான்கு பேர் பொறுப்பு என நிர்வாகம் கூறியது. இந்த டிக்கெட் புக் மதிப்பு 93 ஆயிரத்து 22 ரூபாய். ஒவ்வொருவரும் தலா 18 ஆயிரத்து 604 ரூபாய் செலுத்த வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டது. 10 தவணைகளாக செலுத்த உத்தரவிட்டது. நான்கு தவணைகளை நான் செலுத்தி விட்டேன்.

அதன்பின், மீண்டும் டிக்கெட் புக் குறைவாக இருப்பதாகக் கூறி, அதன் மதிப்புத் தொகையை நான் உட்பட ஆறு பேரிடம் தலா 24 ஆயிரத்து 590 ரூபாயை பிடித்தம் செய்ய நிர்வாகம் முடிவெடுத்தது. இதையடுத்து, முதலில் வசூலிக்கப்பட்ட தொகைக்கு கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றேன். இந்நிலையில் என்னை பணியில் இருந்து ஓய்வு பெற நிர்வாகம் அனுமதித்தது. இதையடுத்து, எனக்கு ஓய்வூதியப் பலன் எதையும் வழங்கவில்லை. எனது ஓய்வூதிய பலன்களில் இருந்து நிர்வாகத்துக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையை வசூலித்துக் கொள்ள ஒப்புதல் அளிக்கிறேன். இதுதொடர்பாக கடந்த மாதம் 11ம் தேதி போக்குவரத்துக்கழக நிர்வாகத்துக்கு மனு அனுப்பினேன். மனுவை பரிசீலித்து பைசல் செய்ய உத்தரவிட வேண்டும். ஓய்வூதியப் பலன்களை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், “ஓய்வூதிய பலன்கள் முழுவதையும் போக்குவரத்துக் கழகம் நிறுத்தி வைக்க முடியாது. மே மாதம் 11ம் தேதி மனுதாரர் அனுப்பிய மனுவை இரண்டு வாரங்களில் கோவையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் பைசல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *