ஹராரே :இளம் இந்திய அணி சாதித்துக் காட்டியது. நேற்று நடந்த இரண்டாவது “டுவென்டி-20′ போட்டியில் கேப்டன் சுரேஷ் ரெய்னா 72 ரன்கள் விளாச, ஜிம்பாப்வேயை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது.
தவிர, முத்தரப்பு தொடரில் சந்தித்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட, “டுவென்டி-20′ தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று இரண்டாவது மற்றும் கடைசி “டுவென்டி-20′ போட்டி நடந்தது. “டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரெய்னா, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
தொடரும் ஏமாற்றம்: ஜிம்பாப்வே அணியின் மசகட்சா (2) மீண்டும் ஏமாற்றினார். பின் வந்த சிபாபா(7) சொதப்பினார். டெய்லர் (27), யூசுப் பதானின் “சூப்பர் கேட்ச்சில்’ பெவிலியன் திரும்பினார்.
கவன்ட்ரி ஆறுதல்:அடுத்து வந்த கவன்ட்ரி, அதிரடியில் அசத்தினார். அஷ்வினின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். இவர் 28 ரன்கள் (13 பந்து) எடுத்திருந்த நிலையில், டிண்டாவின் “யார்க்கரில்’ வீழ்ந்தார். கேப்டன் சிகும்பரா, 18 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. தைபு (45), லாம்ப் (7) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
விஜய் அசத்தல்: எட்டிவிடும் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, இம்முறை நமன் ஓஜா, முரளி விஜய் துவக்கம் கொடுத்தனர். மந்தமாக ஆடிய ஓஜா 10 ரன்கள் எடுத்தார். அடுத்து முரளி விஜயுடன் கேப்டன் ரெய்னா இணைந்தார். இந்த ஜோடி ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை, எளிதாக சமாளித்தனர். மபோபு ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து மிரட்டிய முரளி விஜய்(46), அரைசத வாய்ப்பை இழந்து, வெளியேறினார்.
ரெய்னா அசத்தல்: மபோபு பந்தில் சிக்சர் விளாசிய ரெய்னா, சர்வதேச “டுவென்டி-20′ அரங்கில் மூன்றாவது அரைசதத்தை பதிவுசெய்தார். யூசுப் பதான் (4) நிலைக்கவில்லை. பின் ரெய்னா, மிரட்டல் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி 18 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்த ரெய்னா, ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
Leave a Reply