சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களான சர்க்கரை, மிளகாய், தனியா விலை வெகுவாக குறைந்துள்ளது என்றாலும், பாசிப்பருப்பு, வெல்லம், பூண்டு விலை உயர்வு என்பது கவலையடைய வைத்துள்ளது.
கரும்பு விளைச்சல் அதிகரிப்பு மற்றும் 17 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளதால், சர்க்கரை விலை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த மாதம் 3,000க்கு விற்ற சர்க்கரை (நூறு கிலோ மூட்டை), தற்போது 2,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரையில் ஒரு கிலோ 32லிருந்து 29 ரூபாயாக குறைந்துள்ளது.
பருப்பு விலை: கடந்த மாதம் 6,900க்கு விற்ற துவரம் பருப்பு (100 கிலோ), நூறு ரூபாய் குறைந்து 6,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரையில் கிலோ 71 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த மாதம் 7,900க்கு விற்ற உளுந்தம் பருப்பு முதல் ரகம், 7,300 ரூபாய்க்கும், 7,000த்துக்கு விற்ற இரண்டாம் ரக உளுந்தம் பருப்பு 6,500க்கும் விற்கப்படுகிறது. பர்மா உளுந்து 6,200லிருந்து 5,700 ரூபாயாக குறைந்துள்ளது.
எகிறியது பாசிப்பருப்பு: இறக்குமதி குறைவு, ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக அரசு 14 ஆயிரம் டன் கொள்முதல் செய்ததால், பாசிப்பருப்பு விலை 8,700லிருந்து 9,600 ரூபாயாக அதிகரித்துள்ளது. சில்லரையில் ஒரு கிலோ 90லிருந்து 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக பாசிப்பருப்பின் விலையும் உயர்ந்துள்ளது. விளைச்சல் குறைவால் பூண்டு முதல் ரகம், கிலோ 85லிருந்து 100 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 60லிருந்து 75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
குறைந்தது மிளகாய், தனியா: குண்டு மிளகாய் முதல் ரகம் ஒரு கிலோ 110லிருந்து 90 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 80லிருந்து 60 ரூபாயாகவும் குறைந்துள்ளது. தனியா விலை கிலோ 60லிருந்து 45 ரூபாயாக குறைந்துள்ளது. நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் மிளகாய், தனியா விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது என, தமிழக மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறினார்.
சேலம் வெல்லம் கிலோ 30லிருந்து 36 ரூபாயாகவும், வேலூர் வெல்லம் 34லிருந்து 40 ரூபாயாகவும், அச்சு வெல்லம் 40லிருந்து 50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலை குறைந்தாலும், சிலவற்றின் விலை குறையாமல், மேலும் எகிறிக் கொண்டே செல்வது எல்லாரையும் கவலையடைய வைப்பதாகவே உள்ளது.
Leave a Reply