கோவை : செம்மொழி மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஜூலை 4 வரை காண வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், நாளை மாநாடு நிறைவு பெற்றாலும், மேலும் ஒரு வாரத்துக்கு எந்த கெடுபிடியும் இல்லாமல் கண்காட்சி அரங்குகள் மற்றும் அலங்கார ஊர்திகளை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பழங்கால அரசர்கள் பயன்படுத்திய அரிய நாணயங்கள், முத்திரைகள், செப்பேடுகள், ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பிரமாண்ட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் இணையதள கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. தமிழ் கம்ப்யூட்டர் கீ போர்டு, மென்பொருட்கள் தொடர்பான இக்கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். கண்காட்சி துவங்கிய ஜூன் 24 முதல் நேற்று வரை மூன்று லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களை விட நேற்று கண்காட்சியை காண அதிக கூட்டம் காணப்பட்டது. கண்காட்சி அரங்கில் இருந்து அவினாசி ரோடு வரை கூட்டம் நீண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்ததால் இரவு 8.30 மணிக்குப் பின், யாரையும் அனுமதிக்கவில்லை. கண்காட்சி அரங்குகளைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் நீண்ட நேரம் இங்கு செலவிட்டனர்.
கண்காட்சி அரங்குகளுக்கு கிடைத்துள்ள பிரமாத வரவேற்பு காரணமாக, கண்காட்சி அரங்குகளை பார்வையிடுவதற்கான தேதியை ஜூலை 4 வரை அரசு நீட்டித்துள்ளது. செம்மொழி மாநாட்டின் முதல் நாளன்று நடந்த “இனியவை நாற்பது’ அலங்கார ஊர்திகள் தற்போது ஜி.சி.டி., தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அன்றைய தினம் அலங்கார ஊர்திகளை பார்வையிடாத பொதுமக்கள், அங்கு கூட்டம் கூட்டமாக சென்று பார்வையிட்டு வருகின்றனர். ஊர்திகளின் முன், குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இங்கு கடலை பொரி, பொரியுருண்டை, வெள்ளரிக்காய், மாங்காய் உட்பட்ட தின்பண்டங்களும் விற்கப்படுவதால், கல்லூரி வளாகமே சிறு கண்காட்சி அரங்காக மாறியுள்ளது.
இதனால், நாளை மாநாடு முடிந்தபின் பல லட்சம் ரூபாய் செலவில் தயாரான இந்த ஊர்திகளையும் மாநாட்டு வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அரசு முடிவு செய்துள்ளது. செம்மொழி மாநாட்டு கொண்டாட்டங்கள் இன்னும் ஒரு வாரம் நீடிக்கும். மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தக கண்காட்சி ஏராளமானோரை ஈர்த்து வருகிறது.
தமிழ் இலக்கியம் தொடர்பான புத்தகங்கள் அதிகளவில் விற்பனைக்கு உள்ளன. தற்போது முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளது. நாளை மாநாடு முடிந்தபின் இந்த கெடுபிடிகள் எதுவும் இல்லாமல் கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் சாவகாசமாக பார்வையிடலாம்.
Leave a Reply