புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வில், புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் மாணவர் தெய்வானைசுந்தரம் முதலிடத்தை பிடித்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் இந்தியா முழுவதும் 21 ஆயிரத்து 895 பேர் தேர்வு எழுதினர். புதுச்சேரியில் மட்டும் 3,640 பேர் எழுதினர்.இதில், புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில், 200க்கு 149 மதிப்பெண் பெற்ற மாணவர் தெய்வானைசுந்தரம் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவரது தந்தை நாச்சியப்பன், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் இதய சிகிச்சை டாக்டராக பணிபுரிகிறார். தாய் அலமேலு, புதுச்சேரி பொறியியல் கல்லுரியில் பேராசிரியை.மாணவர் தெய்வானைசுந்தரம் கூறியதாவது:பேட்ரிக் பள்ளியில் படித்த நான், பிளஸ் 2 தேர்வில் 1,156 மதிப்பெண் பெற்றேன்.
வேதியியல், இயற்பியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் எடுத்தேன். என் தந்தையை போலவே டாக்டராக வேண்டும் என்பதே லட்சியம்.ஏற்கனவே தேர்வு எழுதிய ஏ.ஐ.பி.எம்.டி., தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். இதன் மூலம் இந்தியாவிலுள்ள எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் சேர முடியும். புனேயிலுள்ள ராணுவ மெடிக்கல் கல்லூரி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளேன். மேலும், ஐ.ஐ.டி., தேர்விலும் தேர்ச்சியடைந்துள்ளேன். இருப்பினும், ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆர்வமாக உள்ளேன்.இவ்வாறு தெய்வானைசுந்தரம் கூறினார்.
Leave a Reply