கோவை : பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கோவையில் ஜூன் 23ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது.
மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோருக்கு நன்றி; மாநாடு வெற்றி பெறுவதற்கு உதவிய காவல்துறையினர், ஊடகத் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி; மாநாட்டில் கலந்து கொண்ட தமிழறிஞர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கும் நன்றி; மாநாட்டு பணிகளை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செய்திருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார். அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.
தமிழக சட்டமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வருமா?
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கும் வேளையில் தமிழக சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக பேச தேவையில்லை.
செம்மொழி மாநாட்டையொட்டி சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
கோவை செம்மொழி மாநாட்டை முன்னிட்டு சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிக்கவில்லை. அரசு அறிவிக்காமலேயே அந்த அம்மையார் யாரை நம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார் என தெரியவில்லை.
மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படுமா?
மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வரும் தீர்மானம் நிறைவேற்றப்படும்போது நிச்சயமாக மக்கள் கருத்து கேட்கப்படும்.
உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என கூறியிருக்கிறீர்களே?
உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என நான் கூறியதற்கு ஓய்வு பெற போவதாக அர்த்தம் இல்லை; நான் ஓய்வுபெற வேண்டும் என நீங்கள் கூறினால் ஓய்வு எடுக்க தயாராக உள்ளேன்.
கோடநாட்டில் ஜெயலலிதா விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோடநாட்டில் விதிமுறைக்கு புறம்பாக ஜெயலலிதா தேயிலை தொழிற்சாலை கட்டி வருவதாக எழுப்பப்பட்டுள்ள புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாது; தீர விசாரித்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறதே?
மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருப்பதாலேயே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலை உயர்வில் இருந்து தற்போது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது; இந்த விலைவாசி உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டாலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.
அடுத்த செம்மொழி மாநாடு எப்போது நடைபெறும்?
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக ஜப்பானில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பு கோரப்படும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
Leave a Reply