சென்னை:விபத்துக்குள்ளாகும் டேங்கர் லாரிகளுக்கு தண்டனை விதிக்க வகை செய்து ஆயில் நிறுவனங்கள் பிறப்பித்த நிபந்தனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
தென்மண்டல எல்.பி.ஜி., போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் தாக்கல் செய்த மனு:காஸ் சிலிண்டர்களை எங்கள் டேங்கர் லாரிகளில் ஏற்றிச் செல்கிறோம். ஆயில் நிறுவனங்கள் வெளியிடும் டெண்டர் அடிப்படையில், எங்களுக்கு சிலிண்டர்களை ஏற்றிச் செல்வதற்கு கான்ட்ராக்ட் வழங்கப்படுகிறது.
ஆயில் நிறுவனங்கள் பிறப்பித்த டெண்டர் அறிவிப்பாணையில், தண்டனை விதிக்க வகை செய்யும் ஒரு பிரிவு உள்ளது.அதன்படி, டேங்கர் லாரிகள் முதன் முதலில் விபத்துக்குள்ளானால், ஒரு மாதம் உரிமம் நிறுத்தி வைக்கப்படும். இரண்டாவது முறை என்றால் மூன்று மாதங்கள், மூன்றாவது முறை என்றால் கருப்புப் பட்டியலில் வைக்கப்படும். இவ்வாறு தண்டனை விதிக்க எந்த அடிப்படையும் இல்லை.எதிர்பாராதவிதமாக தான் விபத்து ஏற்படுகிறது. எங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும் இந்த செயலுக்காக, எங்களுக்கு தண்டனை வழங்கக் கூடாது. நெடுஞ்சாலைகள் மிக மோசமாக உள்ளன. குறிப்பாக கர்நாடகாவில் சாலைகள் மோசமாக உள்ளன.எனவே, ஆயில் நிறுவனங்கள் பிறப்பித்த டெண்டர் அறிவிப்பாணையில் உள்ள தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். ஆயில் நிறுவனங்கள் சார்பில் சீனியர் வக்கீல் டி.ஆர்.ராஜகோபாலன், வக்கீல்கள் வி.அனந்த நடராஜன், சந்தானகிருஷ்ணன், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் மத்திய அரசு வக்கீல் எல்.சங்கரன் ஆஜராகினர். நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவு:ஆயில் நிறுவனங்கள் விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தும், பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை. சிலிண்டர்களை டேங்கர் லாரிகள் ஏற்றி செல்வதால், ஏதாவது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டால் பொது மக்களுக்கும், சொத்துக்களுக்கும் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தி விடும். பொதுமக்கள் நலன் கருதி, இந்த தண்டனை பிரிவை ஆயில் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன.சமீப காலங்களில் டேங்கர் லாரிகள் அதிக அளவில் விபத்துக்குள்ளாகின்றன.
கேரளா மாநிலம் கொல்லத்தில் டேங்கர் லாரி விபத்தால் நான்கு பேர் இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தினால் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, பொது மக்களின் நலன்களை ஆயில் நிறுவனங்கள் கருத்தில் கொண்டுள்ளன. ஆயில் நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் என்பதால், பொதுமக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது.மக்களின் பாதுகாப்பு, பணிபுரியும் இடத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே, இந்த பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply