தமிழில் வாதாட ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்: ஜெ.,

posted in: அரசியல் | 0

large_25829சென்னை : “கருணாநிதிக்கு உண்மையிலேயே தமிழ்ப்பற்று இருந்தால், சென்னை ஐகோர்ட்டில் தமிழில் வாதாட, மத்திய அரசை வலியுறுத்தி ஜனாதிபதியின் ஒப்புதலை உடனே பெற வேண்டும்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் பெஞ்ச், தமிழில் வாதாட வாய்மொழி அனுமதி அளித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியான தகவல். இதை செயல்படுத்த வேண்டிய முதல்வர் கருணாநிதி, வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.”சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்’ என, நான்கு ஆண்டுகளுக்கு முன் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசை வற்புறுத்தாமல் கருணாநிதி மவுனமாக இருப்பதைப் பார்த்தால், “பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்ற பழிமொழிக்கேற்ப, இரட்டை வேடம் போடுகிறாரோ என, தமிழக மக்கள் மனதில் சந்தேகம் எழுகிறது.ஐகோர்ட்டில் தமிழில் வாதாடுவது குறித்து சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என ஒரு வக்கீல், சென்னை ஐகோர்ட் முதல் பெஞ்ச் முன் வலியுறுத்திய போது, “அரசியலமைப்புச் சட்டப்படி வரையறைகள் உள்ளன. நாங்கள் சுற்றறிக்கை பிறப்பிக்க முடியாது’ என, தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்.

இதற்கான உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகள் தான் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 348(2)ன் படி, ஜனாதிபதி முன்அனுமதியுடன் மாநில அலுவல்களுக்காக பயன்படுத்தப்படும் மொழியை, அம்மாநில ஐகோர்ட் நடவடிக்கைகளில் பயன்படுத்த அனுமதிக்கும் அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உண்டு.கடந்த 1963ம் ஆண்டு ஆட்சி மொழிகள் சட்டம் பிரிவு 7ன்படி, ஆங்கிலத்தைத் தவிர, இந்தி மொழியையோ, மாநில ஆட்சி மொழியையோ, மாநிலத்தில் உள்ள ஐகோர்ட் தீர்ப்புகளில் பயன்படுத்த அனுமதிக்கும் அதிகாரம் மாநில கவர்னருக்கு மட்டுமே உண்டு.சட்ட மேலவைக்கான ஒப்புதலை ஒரே வாரத்தில் பெறக்கூடிய அதிகாரம் படைத்த கருணாநிதி, சென்னை ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்குவது குறித்து ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார்?

செம்மொழி மாநாட்டிற்கு வந்துள்ள ஜனாதிபதியிடம் கருணாநிதி இதுகுறித்து வாய் திறக்காதது வேதனையளிக்கும் செயல்.தமிழுக்கு இதைக்கூட செய்யாமல் செம்மொழி மாநாடு என்ற பெயரில் தன்னல மாநாடு எதற்கு? ஒருவேளை வற்புறுத்தாமல் இருந்தால், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது, கனிமொழிக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கருணாநிதி எதிர்பார்க்கிறாரோ என்னவோ.பீகார், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகள் ஐகோர்ட்டுகளில் ஆட்சி மொழியாக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.தமிழில் வாதாடலாம் என்ற சென்னை ஐகோர்ட் நீதிபதியின் கருத்து முழு வடிவம் பெற வேண்டுமானால், மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்.

தமிழ்ப்பற்று கருணாநிதியிடம் உண்மையிலேயே இருந்தால், இந்த விஷயத்தில் மத்திய அரசை வலியுறுத்தி ஜனாதிபதி ஒப்புதலை உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *