சென்னை:””கொடநாடு சென்றபோதும், அன்றாடம் விடுக்கும் அறிக்கையில் என்னைப் பற்றியே ஜெயலலிதா எழுதிக் குவிக்கிறார்.
எஞ்சிய அ.தி.மு.க.,வினர் இங்கே வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள முயல்கிறார்,” என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி அறிக்கை விவரம்:நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க வேண்டும் என்பது தி.மு.க.,வின் திட்டவட்டமான கொள்கை. இதற்காக பலமுறை, கட்சி பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதுபோலவே கோர்ட்டுகளில் வாதாடும் வழக்கு மொழியாக தமிழ் இடம் பெற வேண்டும் என்று தொடர்ந்து வாதாடி வந்திருக்கிறோம்.
ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வலியுறுத்தி, மதுரையில் வக்கீல்கள் சிலர், உண்ணாவிரதம் இருக்கிறார்களாம். அந்த வக்கீல்களை அ.தி.மு.க., – ம.தி.மு.க.,வினர் சந்தித்து ஆதரவை தெரிவித்திருக்கிறார்களாம். அரசுக்கு எதிராக எங்கே யார் குரல் கொடுத்தாலும் சரி, அவர்களுக்கு ஆதரவை தெரிவிக்க இந்த இரண்டு கட்சியினரும் புறப்பட்டு விடுகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல்கள், தமிழ் மன்றம் சார்பாக கடந்த 2001ம் ஆண்டு, ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, இந்த பிரச்னையில் அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை.கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்கிறேன் வாருங்கள் என அழைத்து விட்டு, வந்து குவிந்த கட்சிக்காரர்களின் மனுக்களை முழுவதும் பெறாமல், ஒரு மணி நேரம் மட்டுமே இருந்துவிட்டு அவசரமாக கொடநாடு புறப்பட்டுச் சென்ற ஜெயலலிதா, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை பற்றியும் புலம்பியிருக்கிறார். தனக்கு தானே தம்பட்டத் தன்னல மாநாடு என்றெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1995ம் ஆண்டு தஞ்சையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரால் ஜெயலலிதா வாழ்த்துப்பா பாடினார்களே அதற்கு என்ன பெயராம். அப்படிப் பாடி மாநாடு நடத்தியவர்களுக்கு கோவை மாநாடு தன்னல மாநாடகத்தான் தெரியும். கொடநாடு சென்றபோதும், அன்றாடம் விடுக்கும் அறிக்கையில் என்னைப் பற்றியே எழுதிக் குவிக்கிறார். எஞ்சிய அ.தி.மு.க.,வினர் இங்கே வந்து விடாமல் பார்த்துக்கொள்ள முயல்கிறார்.
வக்கீல்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர் என்று கேள்விப்பட்டதும், மத்திய அமைச்சர் அழகிரியை தொடர்பு கொண்டு அதைப்பற்றி உடனடியாக கவனிக்க வேண்டும் என்று கூறினேன். அழகிரியை வக்கீல்கள் சந்தித்து நிலைமையை விளக்கினர். அழகிரி, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியிருக்கிறார். இதிலிருந்து ஐகோர்ட்டில் தமிழ் இடம்பெற வேண்டும் என்பதில் அரசுக்கு உள்ள ஆர்வத்தையும், பொறுப்பையும், அக்கறையையும் புரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Leave a Reply