புதுடில்லி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை இன்று உயரலாம். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 25 முதல் 50 ரூபாய் வரையும் உயரும் என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
“பெட்ரோல், டீசல் விலைகளை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையையும் கணிசமாக உயர்த்த வேண்டும்’ என, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக பரிசீலிக்க நியமிக்கப்பட்ட கிரீத் பரேக் கமிட்டி கூறியுள்ளது. இந்த கமிட்டியின் பரிந்துரைகள் பற்றி ஆலோசிக்க, மத்திய அமைச்சர்கள் அடங்கிய அதிகார குழுவின் கூட்டம், டில்லியில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், விலை உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும்.
இதுதொடர்பாக பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இறக்குமதி விலைக்கும் குறைவாக பெட்ரோல், டீசலை தொடர்ந்து விற்பது தாங்க முடியாதது. பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால், அரசு, 72 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்படும் பற்றாக்குறையை சரிசெய்ய நேரிடும். பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை அரசு கைவிட்டால், இறக்குமதி விலைக்கும், சில்லரை விலைக்கும் இடையேயான வேறுபாட்டை சரிசெய்ய நேரிடும். அப்போது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.35 உயர்த்த நேரிடும்.டீசல் விலை மீதான அரசின் கட்டுப்பாட்டையும் கைவிட வேண்டும் என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நினைக்கிறார். ஆனால், அதற்கு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சம்மதம் தெரிவிப்பாரா என்பது சந்தேகமே. அப்படி விலக்கினால், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.3.49 உயரும். மார்க்சிஸ்டுகள் கூட்டணியில் இல்லாததால், முழு எதிர்ப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை,இதுமட்டுமின்றி, சமையல் எரிவாயு விலையும் சிலிண்டர் ஒன்றுக்கு 25 முதல் 50 ரூபாய் வரை உயர்த்தப்படலாம். மண்ணெண்ணெய் விலையும் சிறிதளவு உயரும்.இவ்வாறு பெட்ரோலிய அமைச்சக உயரதிகாரி கூறினார்.
இந்த விலை உயர்வை பிரதமர் மன்மோகன், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தியோரா ஆகியோர் அமல்படுத்த விரும்புகின்றனர். பெரிய தொழில்துறை நிறுவனங்களும் இந்த உயர்வை அமல்படுத்த ஆதரவு தெரிவித்திருக்கின்றன. காரணம், பெட்ரோலியப் பொருட்கள் விலையை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், அதற்கு அளவு கடந்த மானியம் தருவதின் மூலம், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்டுவது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்று வாதிடுகின்றனர்.
அதே சமயம், சமுதாயத்தின் மிகவும் அடித்தளத்தில் உள்ளவர்களுக்கு, குறைந்த நிலம் உடைய விவசாயிகள் போன்றவர்கள் பயன்படுத்தும் டீசல், அதே போல குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் சலுகை விலையில் இவற்றை தரலாம் என்றும், அதற்கு நடைமுறையை ஏற்படுத்தலாம் என்றும் யோசனை கூறுகின்றனர்.இன்று நடக்கும் ஆலோசனையில் அனுமதிக்கப்படும் விலை உயர்வு, ஏற்கனவே அதிகரித்திருக்கும் பணவீக்க அளவை அதிக அளவு உயர்த்தாமல் இருக்குமா என்பதை அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply