புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7ம் தேதி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
பெட்ரோலியப் பொருட்கள் விலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கிரீத் பரேக் கமிட்டி, “பெட்ரோல், டீசல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை கைவிட வேண்டும். சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்த வேண்டும். அதேபோல், கெரசின் விலையையும் உயர்த்த வேண்டும். எரிபொருள் மானியத்தை கணிசமாக குறைக்க வேண்டும்’ என, பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய அதிகார குழு வரும் 7ம் தேதி கூடுகிறது.
இக்கூட்டத்தில் முகர்ஜி, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, விவசாய அமைச்சர் சரத்பவார், உரத்துறை அமைச்சர் அழகிரி, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் கமல்நாத், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது என, தீர்மானிக்கப்படலாம். ஆனாலும் அதை அப்படியே அமல்படுத்தினால் லிட்டருக்கு ஆறு ரூபாய் வரை உயர்வு அமலாகும். ஆகவே, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.35ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.49ம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்து அரசிடம் உருவாகியிருக்கிறது. அதனால், இரண்டின் விலைகளும் லிட்டருக்கு தலா ரூ.3.50 வரை உயரலாம். கடந்த வாரம் வரை பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு 255 கோடி ரூபாய் அளவுக்கு அரசு எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்து வந்தன. தற்போது அவை நாள் ஒன்றுக்கு 203 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கின்றன. காரணம், கச்சா எண்ணெய் பேரல் விலை சராசரி 70 டாலருக்கும் சற்று குறைவாக இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் விலைக்கும் விற்கும் விலைக்கும் இடையே இடைவெளி இருக்கக்கூõடது என்ற கருத்து அரசிடம் அதிகரித்திருக்கிறது.
தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.35 குறைவாகவும், டீசல் விலை ரூ.3.49 குறைவாகவும், கெரசின் விலை லிட்டருக்கு ரூ.18.82 குறைவாகவும், சமையல் காஸ் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.261.90 குறைவாகவும் சலுகையில் விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலைகளைப் போல, கெரசின் விலையை லிட்டருக்கு ஆறு ரூபாயும், சமையல் காஸ் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாயும் உயர்த்த வேண்டும் என, பரேக் கமிட்டி பரிந்துரை செய்திருந்தாலும், அந்த அளவுக்கு விலை உயர்த்தப்படாது. சமையல் காஸ் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை உயர்த்தப்படலாம். கடந்த சிலமாதங்களாகவே அவ்வப் போது பெட்ரோல் விலை உயர்வு பற்றி அரசு பூச்சாண்டி காட்டி வருகிறது. சமீபத்தில் இயற்கை எரிவாயுவை இருமடங்கு உயர்த்திய அரசு அதற்குப் பின் அதிக எதிர்ப்பு இல்லை என்பதை உணர்ந்திருக்கிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் நடைமுறையை மாற்ற விரும்புகிறது. இந்த விஷயத்தில் திட்டக்கமிஷன், நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகிய எல்லாமே ஒரே கருத்தில் செயல்படுகின்றன.
Leave a Reply