புதுடில்லி : ‘பெட்ரோல் விலை உயர்வு, வாகன தயாரிப்புத் தொழிலை சிறிது காலம் பாதிக்கத்தான் செய்யும். ஆனால், பெட்ரோல் விலை நிர்ணயம் இனி எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்பது வரவேற்கத்தக்கது’ என்று இந்திய ஆட்டோமொபைல் சொசைட்டி தெரிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி சொசைட்டி கூறுகையில்,’இந்த விலை உயர்வு, வாகன தயாரிப்புத் தொழிலில் சிறிது காலத்துக்கு எதிர்மறையான விளைவை உண்டு பண்ணும் என்றாலும், வளர்ச்சி எவ்விதத்திலும் பாதிக்கப்படாது’ என்று தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ஆர்.சி. பார்கவா கூறியதாவது : உலகம் முழுவதும் பெட்ரோல் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனங்களால்தான் செய்யப்படுகின்றன. இது இப்போது இங்கு நிகழ்ந்துள்ளது. அரசு, ஒரு நல்ல நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. பெட்ரோல் விலை உயர்வால் சிறிய கார்களின் விற்பனை அதிகரிக்கும். பெரிய வாகனங்களின் விற்பனை சிறிது காலத்திற்குப் பாதிக்கும். அதுவும் தற்காலிகம் தான். பெட்ரோல் விலை 2 அல்லது 3 ரூபாயாக இருந்த போது வாகனங்களின் விற்பனையும் குறைவாகத்தான் இருந்தது. 50 ரூபாயாக உயர்ந்த போது விற்பனையும் அதிகரித்தது. இவ்வாறு பார்கவா தெரிவித்தார். இந்திய ஆட்டோமொபைல் துறை, 2009-10ல் ஒரு கோடியே 22 லட்சத்து 92 ஆயிரத்து 770 வாகனங்களை விற்று சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply